search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    வீடியோ காலில் தனியாக பேசலாம் - வாலிபர்களுக்கு ‘ஆபாச வலை’ வீசும் பெண்கள்

    வாட்ஸ்-அப்பில் பெண் ஒருவர் அனுப்பிய ஹாய் மெசேஜால் கவர்ந்து இழுக்கப்பட்ட வில்லிவாக்கம் இளைஞர் ஒருவர் ரூ. 50 ஆயிரம் பணத்தை இழந்துள்ளார்.

    வாட்ஸ்-அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலை தளங்கள் பல்வேறு நல்ல வி‌ஷயங்களுக்கு பயன்படும் நிலையில் அதில், ஆபாச தகவல்களும் குவிந்து கிடக்கின்றன.

    நண்பர்களின் பேஸ்புக் பக்கத்தில் நாம் அவர்களோடு பேசிக் கொண்டிருக்கும் நேரங்களில் திடீரென ஆபாச முகநூல் பக்கங்களும் எட்டிப் பார்ப்பது உண்டு. இதுபோன்ற நேரங்களில் அதனை கண்டுகொள்ளாமல் கடந்து சென்று விட்டால் பிரச்சினை இல்லை.

    விதவிதமான கவர்ச்சி பெயர்களில் தொடங்கப்பட்டுள்ள இந்த பக்கங்களின் முகப்பில் கவர்ச்சியான சுண்டி இழுக்கும் புகைப்படங்களும் இடம்பெற்றிருக்கும். அதன் உள்ளே சென்று பார்த்தால் இளம்பெண்கள் பலரின் புகைப்படங்கள் பரவி கிடக்கும்.

    அதில் நான் தனிமையில்தான் இருக்கிறேன். வீடியோ கால் செய்தால் பேசலாம் என்கிற வாசகங்கள் இடம்பெற்றிருக்கும்.

    இந்த முகநூல் பக்கத்தை போன்று வாட்ஸ்-அப்பிலும் திடீரென அறிமுகம் இல்லாத எண்களின் இணைப்பு வருவது உண்டு. முதலில் ஹாய் என்கிற மெசேஜ் மட்டும் வரும். அதனை பார்த்து போன் செய்தால் தேவையில்லாமல் ஏதோ ஒரு பெண் பேசுவார்.

    அதன்பிறகு போனில் பேசியதற்கு இளம்பெண் வலைவிரிக்க தொடங்குவார். இப்படி பேஸ்புக் மூலமாகவும் அதிக அழைப்புகள் வருவது உண்டு. இதனை நம்பி வீடியோ கால் செய்து பலர் பணத்தை இழந்து வருகிறார்கள்.

    இதை தவிர ஆபாச இணையதளங்களில் லைவ் வீடியோ பார்க்கலாம் என்ற அழைப்பும் அவ்வப்போது வருவது உண்டு. இது போன்ற அழைப்பை நம்பி லைவ் வீடியோ பார்க்க விரும்பினால் அதற்கு முதலில் பணம் கட்ட வேண்டும். இப்படி பணம் கட்டி தேவையில்லாத சிக்கலில் சிக்கிக் கொள்பவர்களும் உண்டு.

    அதே நேரத்தில் வீடியோ காலில் ஆபாசமாக தோன்றி பணம் பறிக்கும் கும்பல் சமீபகாலமாக அதிகரித்து உள்ளது.

    இதுபோன்று பெண் ஒருவர் அனுப்பிய ஹாய் மெசேஜால் கவர்ந்து இழுக்கப்பட்ட வில்லிவாக்கம் இளைஞர் ஒருவர் அந்த பெண்ணின் வாட்ஸ்-அப் நம்பரில் வீடியோ கால் செய்துள்ளார்.

    அப்போது எதிரில் வட மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் மிகுந்த ஆபாசமாக காட்சி அளித்துள்ளார். பின்னர் அந்த பெண்ணுடனான இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

    சிறிது நேரத்தில் வில்லிவாக்கம் இளைஞரின் செல்போனுக்கு ‘ஸ்கீரின் சாட்’ ஒன்று வந்துள்ளது. அதில் இளைஞர் ஆபாசமாக பெண்ணை ரசித்த காட்சிகள் இடம்பெற்று இருந்தன.

    இதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். அப்போது அந்த பெண்ணின் ஆண் நண்பர் தொடர்பு கொண்டு வில்லிவாக்கம் இளைஞரிடம் பேசினார்.

    பெண்ணின் ஆபாச வீடியோவை ரசித்த உங்களது புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவோம். நாங்கள் சொல்கிறபடி கேட்க வேண்டும் என்று அந்த ஆண் நண்பர் வில்லிவாக்கம் இளைஞரை மிரட்டியுள்ளார்.

    நாங்கள் சொல்லும் வங்கி கணக்கில் ரூ.50 ஆயிரத்தை உடனடியாக போட வேண்டும் என்று மிரட்டியுள்ளனர். இதையடுத்து வில்லிவாக்கம் இளைஞர் பயந்து ரூ.50 ஆயிரம் பணத்தை வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளார்.

    இதன்பின்னரும் இளம்பெண்ணும் அவரது மோசடி கும்பலும் வில்லிவாக்கம் இளைஞரிடம் தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். மேலும் ரூ.50 ஆயிரம் அனுப்ப வேண்டும் என்று கூறினார்கள்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த இளைஞர் இது பற்றி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.

    இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் அந்த பெண் குஜராத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. இவர் பல்வேறு பெயர்களில் இளைஞர்களுக்கு ஆபாச வலை வீசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    மேலும் பல இளைஞர்களிடம் பணம் பறித்து இருப்பது தெரியவந்துள்ளது. இவர்களில் பயந்துபோய் பெரும்பாலானவர்கள் புகார் செய்யாமல் அப்படியே விட்டு விடுவார்கள். ஒரு சிலர் மட்டுமே புகார் அளித்துள்ளனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக சைபர் கிரைம் போலீஸ் உயர்அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “இதுபோன்று பணம் பறிக்கும் மோசடி சம்பவங்கள் புதிதல்ல. அடிக்கடி இளைஞர்கள் பலர் இதுபோன்று பணத்தை பறிகொடுப்பது உண்டு.

    ஆபாச வீடியோ காலில் பேசி பணம் பறிக்கும் பெண்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள் கிடையாது. வடமாநிலங்களை சேர்ந்த பெண்கள்தான் இதுபோன்ற மோசடிகளை அரங்கேற்றி வருகிறார்கள். எனவே சமூக ஊடகங்களை பயன்படுத்தும்போது தேவையில்லாத அழைப்புகளை முழுமையாக தவிர்த்து விட வேண்டும்” என்று கூறினார்.

    வாட்ஸ்-அப், பேஸ்புக் உள்ளிட்டவைகளில் தேவையில்லாத விளம்பரங்கள், ஆபாச இணையதள முகவரிகள் ஆகியவை வராமல் நம்மால் தடுக்க முடியும். அதற்காக செல்போன்களில் தனி வசதிகள் உள்ளன. அதனை பயன்படுத்தி ஆபாச அழைப்புகளை தடுத்து கொள்ளலாம். இதன்மூலம் மோசடி நபர்களிடம் சிக்காமல் தப்பித்துக் கொள்ள முடியும் என்றும் சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர். 

    Next Story
    ×