search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முக ஸ்டாலின்
    X
    முக ஸ்டாலின்

    தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை மு.க.ஸ்டாலின் விரைவில் அறிவிப்பார்

    தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த ஆண்டு வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு நிறுத்தி வைத்தது.

    சென்னை:

    மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 2 முறை அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படுவது வழக்கம். விலைவாசி உயர்வுக்கு ஏற்ப ஜனவரி, ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படும்.

    ஆனால் கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த ஆண்டு வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு நிறுத்தி வைத்தது.

    இந்த நிலையில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படியும், அகவிலை நிவாரண தொகை யும் 3 தவணைகளையும் சேர்த்து 11 சதவீதமம் உயர்த்தப்படுவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

    இதனால் ஏற்கனவே 17 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை 28 சதவீதமாக உயர்த்தி வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

    இதனால் 48 லட்சத்து 34 ஆயிரம் மத்திய அரசின் ஊழியர்களும் 65 லட்சத்து 26 ஆயிரம் ஓய்வூதியதாரர்களும் பயன் அடைவார்கள்.

    மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டிருப்பது போல் தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு எப்போது அறிவிக்கப்படும் என்று உயர் அதிகாரியிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது:-

    கொரேனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு முதல் தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    தற்போது கொரோனா குறைந்து வருவதால் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு சகஜ நிலை திரும்பி வருவதால் ஒவ்வொரு அறிவிப்பாக வெளியிடப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அமைச்சரவை கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளதால் அந்த நடைமுறையை பின்பற்றி தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் கலந்தாலோசித்து அறிவிப்பார்.

    அகவிலைப்படி உயர்வு தொடர்பாக மத்திய அரசு வெளியிடும் அரசாணையில் என்னென்ன குறிப்பிடப்படும் என்பதை பார்த்து அதையொட்டி தமிழக அரசு முடிவு செய்யும்.

    எனவே அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நலன் கருதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நல்ல முடிவெடுத்து அறிவிப்பு வெளியிடுவார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இது பற்றி அரசு ஊழியர் சங்க தலைவர் மு.அன்பரசு கூறுகையில் மத்திய அரசு அறிவிக்கும் அகவிலைப்படி உயர்வை தமிழக அரசும் பின் பற்றிவருவதால் விரைவில் இது தொடர்பான அறிவிப்பை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடுவார் என் எதிர்பார்க்கிறோம்.

    10 நாட்களுக்குள் இதற்கான அறிவிப்பு வரும் என நினைக்கிறோம்.

    இதில் ஏதாவது தாமதம் ஏற்பட்டால் அரசாங்கத்திடம் முறையிடுவோம். எங்களது கோரிக்கையை வலியுறுத்துவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×