search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேஎஸ் அழகிரி
    X
    கேஎஸ் அழகிரி

    லாபத்தில் இயங்கும் ஐ.ஓ.பி.யை தனியார் மயமாக்குவதா?- கே.எஸ்.அழகிரி கண்டனம்

    தமிழ்நாட்டின் முன்னோடி வங்கியாகத் திகழும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு, பெரும் நகரங்களில் தொடங்கி, குக்கிராமங்கள் வரை 1,500 கிளைகள் உள்ளன.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    இந்தியன் ஓவர்சீஸ் வங்கியையும், சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவையும் தனியாருக்கு விற்கும் நடவடிக்கையை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் சந்தை முதலீடு ரூ. 31 ஆயிரத்து 641 கோடி ஆகும்.

    இந்த வங்கி தமிழகத்தின் பாரம்பரிய வங்கியாகும். கடந்த 10.02.1939-ம் ஆண்டு எம்.சி.டி.எம். சிதம்பரம் செட்டியாரால் தொடங்கப்பட்டு, 1969-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால் நாட்டுடைமையாக்கப்பட்டது. தற்போது தமிழ்நாட்டின் முன்னோடி வங்கியாகத் திகழும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு, தமிழ்நாட்டின் பெரும் நகரங்களில் தொடங்கி, குக்கிராமங்கள் வரை 1,500 கிளைகள் உள்ளன.

    பிற கிளைகளுக்குப் பணம் செலுத்தும் போதும், புத்தகம் வரவு வைத்தல் போன்ற சேவைகளுக்கும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கட்டணம் வசூலிப்பதில்லை. தமிழ்நாட்டில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர், இந்தியாவின் எந்த வங்கிக் கிளையிலும் சேவைக் கட்டணம் இன்றி பணம் எடுக்கலாம். மற்ற வங்கிகளில் இந்த சேவைக்குத் தனியாகக் கட்டணம் வசூலிக்கிறார்கள். கிராமப்புற மக்களுக்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆற்றி வரும் சேவை மகத்தானது

    இதுவரை ஒரு வங்கியைக் கூட உருவாக்காத மோடி அரசு, மக்களுக்கு சேவை செய்து கொண்டும், அதேசமயம் லாபத்திலும் இயங்கும் இந்தியன் ஓவர்சீஸ் போன்ற வங்கிகளை விற்க முயல்வது மக்கள் விரோதப் போக்காகும்.

    தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் 85 ஆண்டுகளாக இயங்கி வரும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியைத் தனியாருக்குத் தாரை வார்க்கும் முடிவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 26 ஆயிரம் ஊழியர்களும், சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் 33 ஆயிரம் ஊழியர்களும் பணியாற்றி வருகிறார்கள். மோடி அரசின் முடிவால், இந்த ஊழியர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இந்தியன் ஓவர்சீஸ் வங்கியைத் தனியாருக்கு விற்பனை செய்யும் மோடி அரசின் சர்வாதிகார, எதேச்சதிகார, மக்கள் விரோத நடவடிக்கைக்கு எதிராக மக்களும், அனைத்துக் கட்சியினரும், அமைப்புகளும் ஓரணியில் திரண்டு போராட முன்வரவேண்டும் என்றார்.

    Next Story
    ×