search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முககவசம்
    X
    முககவசம்

    முகக்கவசம் அணியாதவர்களை பிடித்து ஆம்புலன்சில் மயானத்தை சுற்றிக் காட்டி எச்சரிக்கை

    தென்னம்பாளையம் பகுதியில் உள்ள கடைகளில் சிலர் முக கவசம் அணியாமல் சென்றனர். அவர்களை பிடித்து ஆம்புலன்சில் ஏற்றி அரசூர் மயானத்தை சுற்றிக் காட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    கருமத்தம்பட்டி:

    தமிழகத்தில் கொரோனா 2-வது அலை பரவத் தொடங்கி மக்கள் பெரிய அளவில் பாதிப்புக்குள்ளாகியது. இதனை கட்டுப்படுத்த அரசு முழு ஊரடங்கை பிறப்பித்தது. இதனால் கொரோனா பதிப்பு தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது.

    மேலும் ஊரடங்கில் இருந்து சிறிய சிறிய தளர்வுகளை அரசு அளித்து வருகிறது. ஆனாலும் முகக்கவசம் அணிவது, கைகளை அடிக்கடி சோப்பால் கழுவி சுத்தம் செய்யவது, சமூக இடைவெளி பின்பற்றுவது அகியவற்றை கட்டாயம் பின்பற்ற வலியுறுத்தி வருகிறது.

    கொரோனாவில் இருந்து மக்களைக் காப்பாற்றி கொள்ள தடுப்பூசி செலுத்தி கொள்ளவும் வலியுறுத்தி வருகிறது. மேலும் கொரோனா நோய் தொற்று குறித்து அரசு பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனது.

    இந்தநிலையில் கருமத்தம்பட்டி அடுத்த அரசூர் ஊராட்சியில் முகக்கவசம் அணியாமல் சாலையோரம் சென்றவர்களுக்கு அரசூர் ஊராட்சி நிர்வாகம் வினோத முறையில் எச்சரிக்கை வழங்கியது.

    அரசூர் ஊராட்சியில் கொரோனா நோய் தொற்று மிக கடுமையாக உள்ளது. அங்கு கடந்த வாரங்களில் தினசரி 300 பேருக்கு மேல் நோயினால் பாதிக்கப்பட்டனர். தினசரி உயிர் இழப்பும் அதிகமாக இருந்தது.

    இதனால் அரசூர் சாலையோர பகுதிகளில் முகக்கவசம் அணியாதவர்களை ஊராட்சி நிர்வாகம் கடுமையாக எச்சரித்தனர். தென்னம்பாளையம் பகுதியில் உள்ள கடைகளில் சிலர் முகக் கவசம் அணியாமல் சென்றனர். அவர்களை பிடித்து ஆம்புலன்சில் ஏற்றி அரசூர் மயானத்தை சுற்றிக் காட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    ஊராட்சி நிர்வாகத்தில் உள்ள மயானத்திற்கு அழைத்துச் சென்று அவர்களுடைய உயிர்களுக்கு உத்தரவாதம் இல்லை என்பதையும், மயானத்தில் புதைக்கக் கூட இடம் இல்லை என்பதை எடுத்துக் கூறியும் அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து அரசூர் ஊராட்சி நிர்வாகத்தினர் கூறும்போது:-

    இது அச்சுறுத்தும் வகையில் இருந்தாலும் முகக்கவசம் அணியாமல் சாலையோரம் செல்பவர்களை எச்சரிக்க வேண்டும் என்பதற்காக இந்த நூதன முறையை செயல்படுத்தினோம். இதனால் அங்கு இருந்த மற்ற அனைவரும் முகக்கவசம் அணிந்து சென்றனர்.

    முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது, தேவையின்றி வெளியே செல்வது ஆகியவற்றை கடைப்பிடித்தால் மட்டுமே கொரோனாவை நாம் முற்றிலும் ஒழிக்க முடியும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×