search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    மதுரை தோப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற பெண்கள் உள்பட 3 பேர் தப்பி ஓட்டம்

    தற்போது இந்த மையத்தில் 106 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவர்களில் 24 பேருக்கு ஆக்சிஜன் வசதியுடன் கூடிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    திருமங்கலம்:

    கொரோனா நோய் தொற்றால் தினமும் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு மத்திய -மாநில அரசுகள் உரிய சிகிச்சைகளை அளித்து வருகின்றன. இதற்காக அரசு ஆஸ்பத்திரிகளில் சிறப்பு வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

    மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள தோப்பூரில் அரசு காசநோய் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. மிக பெரிய பரப்பளவில் உள்ள இந்த ஆஸ்பத்திரியில் தற்போது கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது.

    இங்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட பலரும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மையத்தில் முதலில் 324 படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை வந்த முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் மேலும் 128 படுக்கை வசதிகளை திறந்து வைத்தார். இதேபோல் அமைச்சர் மூர்த்தி 160 கூடுதல் படுக்கை வசதிகளை ஏற்படுத்தினார். இதன் மூலம் தொற்று பாதிக்கப்பட்ட பலரும் இங்கு சிகிச்சை பெற்று குணமடைந்தனர்.

    தற்போது இந்த மையத்தில் 106 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவர்களில் 24 பேருக்கு ஆக்சிஜன் வசதியுடன் கூடிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    நேற்று இந்த மையத்தில் இருந்து 10 ஆண்கள், 6 பெண்கள் குணமடைந்து வீடு திரும்பினர்.

    இந்த நிலையில் புதிதாக 10 ஆண்கள், 7 பெண்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் இங்கு சிகிச்சையில் இருந்த 2 பெண்கள் உள்பட 3 பேர் மாயமாகி விட்டதாக சுகாதாரத்துறைக்கு தோப்பூர் அரசு மருத்துவ மனை நிர்வாகம் தகவல் தெரிவித்தது. இந்த தகவல் மருத்துவமனை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    தொற்று பாதிக்கப்பட்டவர்கள் மூலம் வேறு யாருக்காவது நோய் பரவி விடக்கூடாது என்பதால் அவர்கள் எங்கு சென்றார்கள்? என சுகாதாரத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

    இதில் ஒரு பெண் தனது சொந்த பகுதியில் உள்ள சிகிச்சை மையத்தில் சேர்ந்து உள்ளதாகவும், மற்றொரு ஆண் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டதாகவும் தெரியவந்துள்ளது. மேலும் ஒரு பெண்ணை சுகாதாரத்துறையினர் மீட்டு சிகிச்சைக்காக சேர்த்து விட்டதாக கூறப்படுகிறது.

    Next Story
    ×