search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேமராவைக் கண்டதும் அச்சப்பட்டு ஒளியும் வெள்ளகவி கிராம மக்கள்.
    X
    கேமராவைக் கண்டதும் அச்சப்பட்டு ஒளியும் வெள்ளகவி கிராம மக்கள்.

    கொரோனா என்றால் என்னவென்றே தெரியாது- மூலிகை கிராமத்தில் வசிக்கும் கிராம மக்கள் பெருமிதம்

    கொரோனா தொற்று ஏற்பட்ட நாள் முதலே முதலாம் அலை மற்றும் இரண்டாம் அலையிலும் வெளியூர் மக்களை அனுமதிக்காமலும், தாங்களும் வெளியூர்களுக்கு செல்லாமலும் தங்கள் கிராமத்திலேயே வசித்து வருவதாகவும் கூறுகின்றனர்.
    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசி கொடைக்கானல் உருவாவதற்கு அடிப்படையாக இருந்தது வெள்ளகவி கிராமம். இந்த கிராமமானது சுமார் 400 வருடங்களுக்கு முன்பு தோன்றியதாக அப்பகுதி கிராம மக்கள் கூறுகின்றனர். இந்த கிராமத்தில் 150 குடும்பங்களும் 400க்கும் மேற்பட்ட மக்களும் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு செல்வதற்கு சாலை வசதி இல்லாததால் கொடைக்கானல் வட்டக்கானல் பகுதியில் இருந்து 6 கி.மீ தூரம் கரடு முரடான ஒத்தையடி பாதையில் அடர்ந்த வன பகுதிக்கு நடுவே நடந்து தான் செல்ல முடியும்.

    மேலும் வெள்ளகவி கிராமத்திலிருந்து கும்பக்கரை அருவி வழியாக பெரியகுளம் செல்வதற்கும் 6 கி.மீ தூரம் நடந்து செல்ல வேண்டும். இந்த கிராமம் வனப்பகுதியின் நடுவே அமைந்துள்ளது. வெள்ளகவி கிராமத்தில் முக்கிய தொழில் விவசாயம் ஆகும். இங்கு ஏலக்காய், காபி, அவக்கோடா, மிளகு உள்ளிட்ட மலைப்பயிர்கள் விவசாயம் செய்யப்படுகிறது. இங்கு விளைவிக்கும் விளைபொருட்களை தலை சுமையாகவும், குதிரை மூலம் கொண்டு சென்று விற்று தங்களது வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.

    மேலும் கொரோனா வைரஸ் தொற்று நாடு முழுவதும் பரவி பலரும் இறந்து வருகின்றனர். இந்த கிராமத்தில் கொரோனா தொற்று என்றால் என்ன? அது எப்படி இருக்கும்? எனவும் எங்களது கிராமத்தில் கொரோனா அச்சம் என்பது துளி கூட இல்லை என கூறுகின்றனர்.

     மூலிகை வனப்பகுதிகள் அமைந்துள்ள கொடைக்கானல் வெள்ளகவி மலைக்கிராமம்.

    இது குறித்து கிராம மக்களிடம் கேட்டபோது, இதுவரை சளி, காய்ச்சல், தலைவலிக்கு கூட மருந்து மாத்திரைகள் பயன்படுத்தாமல் கைவைத்தியம் செய்து கொள்வதாகவும், இங்கு விளைவிக்கப்படும் சத்தான காய்கறிகளை அதிகம் உண்பதாலும், மூலிகை வனப்பகுதிக்கு நடுவே எங்கள் கிராமம் அமைந்துள்ளதால் நோய் தொற்று இல்லாமல் வாழ்வதாக கூறுகின்றனர். மேலும் முகக்கவசம் இல்லாமலும் வழக்கம் போல் அன்றாட பணிகளை செய்து வருகின்றனர்.

    மேலும் இந்த கிராமத்தில் மலையேற்ற பயணத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் இந்த கிராமத்தில் தங்கி செல்வது வழக்கம். கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட நாள் முதலே முதலாம் அலை மற்றும் இரண்டாம் அலையிலும் வெளியூர் மக்களை அனுமதிக்காமலும், தாங்களும் வெளியூர்களுக்கு செல்லாமலும் தங்கள் கிராமத்திலேயே வசித்து வருவதாகவும் கூறுகின்றனர்.

    இந்த கிராமத்தை சுற்றி 24 தெய்வங்கள் இருப்பதால் காலணிகளை அணியாமல் தெய்வங்களுக்கு பயந்து வெறும் கால்களில் ஊருக்குள் கிராம மக்கள் நடந்து செல்கின்றனர். வெளியூர் மக்களையும் காலணிகள் அணியாமல் நடப்பதற்கும் கிராம மக்கள் அனுமதிக்கின்றனர்.

    தற்போது வரை கொரோனா தொற்று ஏற்படாமல் பாதுகாப்பாகவும், சுகாதாரமாக இருப்பதாகவும் கூறுகின்றனர். இந்த வெள்ளகவி கிராமத்திற்கு சென்று திரும்புவதற்கு 8 மணி நேரம் ஆவதால் விரைவில் சாலை அமைப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தற்போது நவீன கால கட்டத்திலும் கேமராவை பார்த்து கிராம மக்கள் பயந்து ஒளிவதும் குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×