search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உதயநிதி ஸ்டாலின் பொதுமக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கினார்
    X
    உதயநிதி ஸ்டாலின் பொதுமக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கினார்

    கோவை விரைவில் கொரோனா இல்லாத மாவட்டமாக மாறும்- உதயநிதி ஸ்டாலின்

    நெகமம் பகுதியில் பொதுமக்களை சந்தித்து நலத்திட்ட உதவிகள் வழங்கிய உதயநிதி ஸ்டாலின் அங்கு அமைக்கப்பட்டிருந்த கொரோனா சிகிச்சை மையத்தையும் திறந்து வைத்தார்.
    கோவை:

    தி.மு.க மாநில இளைஞரணி செயலாளரும், திருவல்லிக்கேணி- சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் கோவையில் முகாமிட்டு கொரோனா தடுப்பு பணி மற்றும் தி.மு.க.வின் ஒன்றிணைவோம் வா திட்டத்தின் மூலம் பொதுமக்களை சந்தித்து அவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    வால்பாறையில் உள்ள தனியார் மண்டபத்தில் வால்பாறை தி.மு.க சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று 200 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது அவரிடம் பொதுமக்கள் மனுக்கள் வழங்கினர்.

    தொடர்ந்து அரசு ஆஸ்பத்திரிக்கு சென்ற அவர் அங்கு ரூ.35 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் நிலையத்தை திறந்து வைத்தார்.

    அப்போது அங்கு பணியில் இருந்த செவிலியர்கள் உதயநிதி ஸ்டாலினுடன் புகைப்படம் எடுக்க முயற்சித்தனர். இதை பார்த்த அவர், அவர்களின் செல்போனை வாங்கி அவர்களுடன் செல்பி புகைப்படம் எடுத்து கொண்டார்.

    இதேபோல் நெகமம் பகுதியில் பொதுமக்களை சந்தித்து நலத்திட்ட உதவிகள் வழங்கிய உதயநிதி ஸ்டாலின் அங்கு அமைக்கப்பட்டிருந்த கொரோனா சிகிச்சை மையத்தையும் திறந்து வைத்தார்.

    தொடர்ந்து கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குறிச்சி பகுதியில் 500-க்கும் மேற்பட்ட இஸ்லாமிய குடும்பங்களுக்கு அரிசி, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.

    இதேபோல் புலியகுளம், மசக்காளிபாளையம், சுந்தராபுரம், பொள்ளாச்சி, தொண்டாமுத்தூர், ரத்தினபுரி, புதுப்பாளையம், கவுண்டம் பாளையம், கருமத்தம்பட்டி, சூலூர் பகுதிகளிலும் பொதுமக்களை சந்தித்து, அவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

    நேற்று ஒரே நாளில் ஒருங்கிணைந்த கோவை மாவட்ட தி.மு.க. சார்பில் 10.17 லட்சம் குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறி, சர்க்கரை, சமையல் எண்ணெய் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

    மசக்காளி பாளையம் பகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கியபோது, அங்கு வந்த பீளமேட்டை சேர்ந்த ஹர்சத்(9) என்ற 4-ம் வகுப்பு மாணவன் தான் சைக்கிள் வாங்க வைத்திருந்த ரூ.1945 பணத்தை கொரோனா நிவாரண நிதிக்காக உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கினார். அதை பெற்று கொண்ட அவர், சிறுவனின் செயலை பாராட்டினார்.

    தொடர்ந்து சோமனூரில் தி.மு.க சார்பில் நடந்த கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ., அப்பகுதி மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி தொடங்கி வைத்து பேசினார்.

    கோவையில் தி.மு.க சார்பில் 10 லட்சம் குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. பொதுமக்களின் ஒத்துழைப்போடு அமைச்சர்கள், தி.மு.க நிர்வாகிகள் கோவையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பணியாற்றி வருகின்றனர்.

    விரைவில் கோவை மாவட்டம் முழுமையாக கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்கப்படும். தற்போது அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் 2-வது கட்டமாக கொரோனா நிவாரண தொகை வழங்கப்பட்டு வருகிறது.

    மக்கள் நோய் தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ள அரசின் விதிமுறைகளை கடைபிடித்து தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கோவையில் நிகழ்ச்சிளை முடித்து கொண்ட உதயநிதி ஸ்டாலின் இரவில் கார் மூலம் ஈரோட்டிற்கு புறப்பட்டு சென்றார்.





    Next Story
    ×