search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜி.கே.வாசன்
    X
    ஜி.கே.வாசன்

    விவசாயிகளுக்கு மானியத்தில் வேளாண் எந்திரம் வழங்க வேண்டும்- ஜி.கே.வாசன் கோரிக்கை

    விவசாயிகள் சாகுபடி செய்யும் பயிர்களுக்கு, பயிர் காப்பீடு திட்டத்தை உறுதி செய்ய வேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

    சென்னை:

    தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆழ்துளை கிணறு மூலமாக சாகுபடி செய்தவர்கள் தற்பொழுது நெல் அறுவடை செய்யும் நிலையில் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழகம் மூலம் அரசு நேரடி கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறக்க வேண்டும்.

    நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் நெல்மணிகளை விற்பனை செய்யும் போது, அவர்களிடம் இருந்து நெல் மூட்டைக்கு 40 ரூபாயை தொழிலாளிகள் பெற்று வருகின்றனர். கொள்முதல் நிலையங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு அரசு கூலி தருகிறது. என்றாலும் உபரியாக வழங்குவது விவசாயிகளை பெரிதும் பாதிக்கின்றது. மேலும் நெல் மூட்டைகளை ஒரு வாகனத்தில் ஏற்றி இறக்குவதற்கு 1000 ரூபாய் வரை செலவு ஆகிறது.

    மேட்டூர் அணையில் இருந்து வருகிற 12-ந்தேதி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. விவசாயிகள் உழவுப் பணிகளை மேற்கொள்ள வேண்டிய ஆயத்த வேலைகளில் இருக்கின்றனர்.

    சென்ற ஆண்டு விவசாயிகளின் வேளாண் கூட்டுறவு சங்கத்தின் மூலம் பெற்ற கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்பட்டது. தற்போதைய அரசு குறுவை சாகுபடி செய்ய மீண்டும் கடன்பெற குறிப்பிட்ட கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வேளாண் வங்கிகள் மூலமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    விவசாயிகள் சாகுபடி செய்யும் பயிர்களுக்கு, பயிர் காப்பீடு திட்டத்தை உறுதி செய்ய வேண்டும். சிறு, குறு விவசாயிகளுக்கு வேளாண் எந்திரங்களை மானியத்தில் அரசு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×