search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    கோவையில் வேகமாக குறையும் கொரோனா தொற்று

    கோவை மாவட்டத்தில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 453 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மாவட்டத்தில் உள்ள ஆஸ்பத்திரிகளில் 39 ஆயிரத்து 112 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
    கோவை:

    கோவை மாவட்டத்தில் கடந்த மார்ச் மாத இறுதியில் இருந்து கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வந்தது. நகரப்பகுதி முதல் கிராமப் பகுதி வரை தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது. ஒரு நாள் பாதிப்பு எண்ணிக்கையில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக 4 ஆயிரத்து 500 தாண்டி பதிவானது.

    மேலும் கொரோனா தினசரி பாதிப்பில் கோவை மாவட்டம் தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறது.

    கோவையில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மு.க.ஸ்டாலின் 2 முறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாவட்டத்தில் எடுக்க வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள், மருத்துவ வசதிகளை கேட்டறிந்து தடுப்பு பணியை தீவிரப்படுத்த உத்தரவிட்டார்.

    மேலும் கோவை மாவட்டத்திற்கு கொரோனா தடுப்பு பணியை கண்காணிக்க சித்திக், வீரராகவ ராவ் ஆகிய 2 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமித்து உத்தரவிட்டார். அவர்கள் தினந்தோறும் மாவட்டம் முழுவதும் சென்று ஆய்வு மேற்கொண்டு கொரோனா தடுப்பு பணியை முடுக்கி விட்டு வருகின்றனர்.

    இந்த நடவடிக்கைகளின் காரணமாக கடந்த சில நாட்களாக கோவையில் தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது.

    கடந்த 29-ந் தேதி 3,692 பேரும், 30-ந் தேதி 3,537 பேரும், 31-ந் தேதி 3,488 பேரும், 1-ந் தேதி 3,332 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மாவட்டத்தில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை வெகுவாக குறைந்து 3 ஆயிரத்து 61 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். தினசரி பாதிப்பு குறைந்து வருவது மக்களிடையே சற்று நிம்மதியை கொடுத்துள்ளது.

    இதுவரை மாவட்டம் முழுவதும் 1 லட்சத்து 76 ஆயிரத்து 910 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறையும் அதே வேளையில் மாவட்டம் முழுவதும் குணமடைவோர் எண்ணிக்கையும் கடந்த சில நாட்களாகவே அதிகரித்துள்ளது.

    நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவாக கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 4,488 பேர் குணமடைந்து வீட்டிற்கு திரும்பியுள்ளனர். இதன் மூலம் மாவட்டத்தில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 453 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மாவட்டத்தில் உள்ள ஆஸ்பத்திரிகளில் 39 ஆயிரத்து 112 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    மாவட்டத்தில் நேற்று 38 பேர் உயிரிழந்ததை அடுத்து எண்ணிக்கை 1,345 ஆக அதிகரித்துள்ளது. தற்போது விதிக்கப்பட்டுள்ள தளர்வுகளற்ற முழு ஊரடங்கால் நல்ல பயன் கிடைத்து வருவதால் இன்னும் சில நாட்களில் கொரோனா தொற்று மேலும் குறைய வாய்ப்புள்ளது.

    Next Story
    ×