search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    திருச்சி மத்திய மண்டலத்தில் உச்சம்- ஒரே நாளில் கொரோனாவுக்கு 69 பேர் பலி

    ஊரடங்கு அமலில் உள்ளதால் இனிவரும் நாட்களிலும் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்பு இருப்பதாக திருச்சி சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் தெரிவித்தார்.

    திருச்சி:

    மத்திய மண்டலமாக விளங்கும் திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டிணம், கரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 8 மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரசின் தாக்கம் சற்று தணிந்துள்ளது. ஆனால் உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருக்கின்றன.

    கடந்த மாதம் திருச்சியில் தினசரி பாதிப்பு 1,800-ஐ தாண்டியது. நேற்றையதினம் 882 பேருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. படிப்படியாக தொற்று குறைந்து வருவது புதிய நம்பிக்கையை அளிப்பதாக உள்ளது.

    அதேபோன்று தஞ்சாவூரிலும் 1,500-ஐ நெருங்கிய தினசரி பாதிப்பு தற்போது சரிந்துள்ளது. நேற்றைய தினம் 920 பேருக்கு பாதிப்பு உறுதியானது. இவ்வாறு மத்திய மண்டலத்தில் உள்ள 8 மாவட்டங்களிலும் தாக்கம் குறைந்துள்ளது.

    இருப்பினும் உயிரிழப்புகள் உச்சம் தொட்டுள்ளது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று ஒரே நாளில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மத்திய மண்டலத்தில் கொரோனா வைரசால் 69 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இதில் அதிகபட்சமாக கரூரில் 17 பேரும், நாகப்பட்டினத்தில் 15 பேரும், தஞ்சாவூரில் 13 பேரும், திருச்சியில் 12 பேரும், அரியலூரில் 5 பேரும், திருவாரூரில் 4 பேரும், புதுக்கோட்டையில் 2 பேரும், பெரம்பலூரில் ஒருவரும் என 69 பேர் பலியாகியுள்ளனர்.

    நாகப்பட்டினத்தில் 674 பேருக்கும், திருவாரூரில் 629 பேருக்கும், கரூரில் 415 பேருக்கும், புதுக்கோட்டையில் 282 பேருக்கும், அரியலூரில் 282 பேருக்கும், பெரம்பலூரில் 236 பேருக்கும், நேற்றைய தினம் தொற்று உறுதி செய்யப்பட்டது. கடந்த வாரத்தை ஒப்பிடும்போது தொற்றாளர்களின் எண்ணிக்கை மேற்கண்ட மாவட்டங்களில் கணிசமாக குறைந்துள்ளது.

    மத்திய மண்டலத்தில் நேற்று 4,321 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் கடந்த வாரத்தில் தினசரி தொற்று 5,000-ஐ நெருங்கியது குறிப்பிடத்தக்கது.

    ஊரடங்கு அமலில் உள்ளதால் இனிவரும் நாட்களிலும் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்பு இருப்பதாக திருச்சி சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் ராம்கணேஷ் தெரிவித்தார். இருப்பினும் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளது மக்களிடையே பீதியையும், அச்சத்தையும் விதைத்துள்ளது.

    Next Story
    ×