search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஏஞ்சலின்
    X
    ஏஞ்சலின்

    முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.2 ஆயிரம் வழங்கிய மனவளர்ச்சி குன்றிய பெண்

    மாதம்தோறும் அரசு வழங்கும் உதவித்தொகை 1,500 ரூபாயுடன் ஏஞ்சலின் சேமிப்பு பணம் 500 ரூபாயையும் சேர்த்து மொத்தம் ரூ. 2 ஆயிரத்தை முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு அனுப்பப்பட்டது.
    மதுரை:

    மதுரை ஆரப்பாளையத்தை சேர்ந்த ராஜ்குமார்-பேபி பாலம்மாள் தம்பதியினரின் ஒரே மகள் தனோலா பிரீத்தி ஏஞ்சலின் (வயது 25).

    இவருக்கு மூளை வளர்ச்சி குறைபாடு காரணமாக, உடம்பில் வயதுக்கு உரிய வளர்ச்சி இல்லை.

    ராஜ்குமார் கூட்டுறவு துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவருக்கு சமீபத்தில் மூளை அறுவை சிகிச்சை நடந்துள்ளது.

    ராஜ்குமாரின ஓய்வூதிய தொகை ரூ. 8 ஆயிரம் மற்றும் ஏஞ்சலினுக்கு அரசு வழங்கும் ரூ.1,500 உதவித்தொகை ஆகியவைதான், அந்த குடும்பத்தின் வாழ்வாதாரம் ஆகும்.

    தமிழகத்தையே புரட்டியுள்ள கொரோனா பாதிப்பு, ஏஞ்சலின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு பணம் வழங்குவது தொடர்பாக ராஜ்குமார் மனைவியுடன் விவாதித்தார்.

    அப்போது மகள் ஏஞ்சலின், “நான் எனது சேமிப்பு தொகையை தருகிறேன், அவற்றுடன் எனக்கான உதவித்தொகையையும் சேர்த்து அனுப்பி வையுங்கள்” என்று யோசனை தெரிவித்தார்.

    அதனைத் தொடர்ந்து, மாதம்தோறும் அரசு வழங்கும் உதவித்தொகை 1,500 ரூபாயுடன் ஏஞ்சலின் சேமிப்பு பணம் 500 ரூபாயையும் சேர்த்து மொத்தம் ரூ. 2 ஆயிரத்தை முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு அனுப்பப்பட்டது.

    இதுகுறித்து ஏஞ்சலின் மழலை மொழியில் கூறுகையில், “நான் அனுப்பியுள்ள இந்த பணத்தில் கொரோனா நோயாளிகளுக்கு மருந்து வாங்கி கொடுத்து அரசாங்கம் அவர்கள் உயிரை காப்பாற்ற வேண்டும்.

    பொதுமக்களே, நீங்களும் தேவை இல்லாமல் வெளியே வராதீர்கள். முக கவசம் அணியுங்கள், கைகளை சுத்தமாக கழுவுங்கள் பாதுகாப்பாக இருங்கள்.

    முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு நாங்கள் கொடுத்துள்ள தொகை மிக சிறிய அளவு என்றாலும், எங்களைப் போல அனைவரும் முடிந்த அளவுக்கு தொகையை அரசுக்கு வழங்குவது நோயாளிகளுக்கு பயன் அளிக்கும்.

    முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்திக்க வேண்டும். அதுதான் இப்போதைக்கு எனது ஒரே ஒரு ஆசை” என்றார்.

    மூளை வளர்ச்சிதான் குறைவே தவிர, மன வளர்ச்சி அல்ல என்பதை செயலின் மூலம் நிரூபித்து உள்ள ஏஞ்சலினுக்கு பாராட்டு குவிகிறது.



    Next Story
    ×