search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 53.20 அடியாக உயர்ந்துள்ளது.
    X
    மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 53.20 அடியாக உயர்ந்துள்ளது.

    வைகையை தொடர்ந்து மஞ்சளாறு அணை நீர் மட்டமும் உயர்வு

    வைகை அணையைத் தொடர்ந்து மஞ்சளாறு அணை நீர் மட்டமும் உயர்ந்துள்ளதால் 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    தேவதானப்பட்டி:

    தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் முல்லைப்பெரியாறு, வைகை அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. 71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர் மட்டம் 66 அடியை எட்டியதைத் தொடர்ந்து முதல் வெள்ள அபாய எச்சரிக்கை நேற்று விடப்பட்டது. இன்று காலை நிலவரப்படி வைகை அணையின் நீர் மட்டம் 66.27 அடியாக உள்ளது. வரத்து 681 கன அடி. திறப்பு 72 கன அடி. இருப்பு 4916 மில்லியன் கன அடி.

    இதே போல் பெரியகுளம் அருகே உள்ள மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 53 அடியை எட்டியதால் கரையோர மக்களுக்கு 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. புயல் காரணமாக முல்லைப் பெரியாறு அணை நீர் பிடிப்பு பகுதியிலும், தேக்கடியிலும் தொடர் மழை பெய்தது.

    இதனால் முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் 130.60 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு 3885 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து 900 கன அடி நீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 4837 மில்லியன் கன அடியாக உள்ளது.

    முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் 130 அடியை கடந்துள்ளதால் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியின் முதல் போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

    அதே வேளையில் அணையில் இருந்து தமிழக பகுதிக்கு வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளதால் லோயர் கேம்ப் மின் உற்பத்தி நிலையத்தில் மின் உற்பத்தி குறைந்தது. கடந்த 16-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை 83 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது.

    தற்போது அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டதால் நேற்று 42 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டது.

    கொடைக்கானல் மலைப்பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் தலையாறு அருவியில் நீர் வரத்து அதிகரித்தது. இந்த நீர் மஞ்சளாறு அணைக்கு வந்ததைத் தொடர்ந்து நீர் மட்டமும் வேகமாக உயர்ந்தது. 57 அடி உயரமுள்ள மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் கடந்த 20-ந் தேதி 51 அடியாக உயர்ந்ததைத் தொடர்ந்து முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 53.20 அடியாக உள்ளது. வரத்து 57 கன அடி. இருப்பு 399.83 மில்லியன் கன அடி.

    இதனையடுத்து மஞ்சளாறு ஆற்றின் கரையோரம் வசிக்கும் தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, வத்தலக்குண்டு, சிவஞானபுரம் கிராம மக்களுக்கு 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கரையோரம் உள்ள மக்கள் ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது என்றும் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்லக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தொடர் மழை காரணமாக போடி, கொட்டக்குடி, ஊத்தாம்பாறை, நண்டலை, கூவலிங்கம் ஆகிய ஆறுகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது. கொட்டக்குடி ஆற்றில் நீர் வரத்து அதிகரிப்பால் பிள்ளையார் தடுப்பணையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. சோத்துப்பாறை அணை ஏற்கனவே தொடர் மழை காரணமாக முழு கொள்ளளவை எட்டியது. தற்போது அணையின் நீர் மட்டம் 126.42 அடியாக உள்ளது. வரத்து 82 கன அடி. திறப்பு 3 கன அடி.

    பெரியாறு 38, தேக்கடி 28.4, கூடலூர் 15.2, சண்முகா நதி அணை 9, உத்தமபாளையம் 8, வீரபாண்டி 2 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது. 

    Next Story
    ×