search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காய்கறிகள்
    X
    காய்கறிகள்

    திருச்சி மேலபுலிவார்டு ரோடு தற்காலிக சந்தையில் காய்கறி விலை பல மடங்கு உயர்வு

    காந்தி மார்க்கெட் தற்காலிக சந்தையில் காய் கறிகளின் விலை இன்று உச்சம் தொட்டது. இது பொதுமக்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பலரும் விலையை கண்டு அஞ்சி காய்கறி வாங்காமல் வியாபாரிகளை திட்டிக் கொண்டு சென்றனர்.

    திருச்சி:

    தமிழகத்தில் கொரோனா வைரசை கட்டுக்குள் கொண்டு வர நாளை (திங்கட் கிழமை) முதல் ஒரு வாரத்துக்கு தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. இதனால் ஏற்கனவே காலை 6 மணி முதல் 10 மணி வரை செயல்பட்டு வந்த மளிகை, காய்கறி கடைகளையும் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    மளிகை, காய்கறி கடைகளும் அடைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியான அடுத்த நிமிடமே பொதுமக்கள் மார்க்கெட்டை நோக்கி படையெடுக்க தொடங்கினர். இதனால் நேற்றும், இன்றும் காந்தி மார்க்கெட் தற்காலிக சந்தை செயல்படும் மேலப்புலிவார்டு ரோடு மற்றும் பாலக்கரை பகுதியில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.

    கொள்முதல் குறைவாக இருந்ததாலும், வியாபாரிகள் செயற்கையாக விலையேற்றியதாலும் காந்தி மார்க்கெட் தற்காலிக சந்தையில் காய் கறிகளின் விலை இன்று உச்சம் தொட்டது. இது பொதுமக்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பலரும் விலையை கண்டு அஞ்சி காய்கறி வாங்காமல் வியாபாரிகளை திட்டிக் கொண்டு சென்றனர்.

    நேற்றைய தினம் 3 கிலோ தக்காளி ரூ.20-க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று 2 கிலோ தக்காளி ரூ.50-க்கு விற்கப்பட்டது. பீன்ஸ் விலையை கேட்டு இல்லத்தரசிகளுக்கு மயக்கமே வந்துவிட்டது. நேற்று கிலோ ரூ.50 ஆக இருந்த பீன்ஸ் விலை இன்று ரூ.180 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

    ரூ.20-க்கு விற்கப்பட்ட கேரட் ரூ.70 முதல் ரூ.80-க் கும், முட்டை கோஸ் ரூ. 10-ல் இருந்து ரூ.40-ஆகவும், பீட் ரூட் ரூ.20-ல் இருந்து ரூ.40 ஆகவும், மணப்பாறை கத்தரிக்காய் கிலோ ரூ.30-ல் இருந்து ரூ.80 ஆகவும், அவரைக்காய் ரூ.40-ல் இருந்து ரூ.100 ஆகவும், பெரிய வெங்காயம் ரூ.15-ல் இருந்து ரூ.25 முதல் ரூ.30 வரையிலும் விலை உயர்த்தி விற்கப்பட்டது.

    இந்த திடீர் விலையேற்றம் மாநகர மக்களுக்கு ஏமாற்றத்தை அளிப்பதாக இருந்தது. விலையேற்றம் தொடர்பாக காந்தி மார்க்கெட் காய்கறி வியாபாரி கமலக் கண்ணனிடம் கேட்டபோது, முழு ஊரடங்கு அறிவிப்பு நேற்று பிற்பகல் வெளியானது. அதற்கு முன்னதாகவே வெளியூரில் இருந்து வரும் காய்கறிகளுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டு குறைந்த அளவே கொள்முதல் செய்யப்பட்டது. இதற்கிடையே தேவை அதிகரித்ததால் விலை உயர்ந்துள்ளது.

    வழக்கமாக விவசாயிகள் காலையிலேயே காய்கறிகள் அறுவடை செய்து மார்க்கெட்டுக்கு கொண்டு வருவார்கள். நேற்று திடீரென மதியம் முழு ஊரடங்கு அறிவிப்பு வெளியானதால் மணப்பறை உள்ளிட்ட உள்ளூர் விவசாயிகள் இரு மடங்கு தொழிலாளர்களுக்கு கூலி கொடுத்து அறுவடை செய்து மார்க்கெட்டுக்கு காய்கறி எடுத்து வந்தனர். இதனால் கொள்முதல் விலையும் உயர்ந்தது.

    நாளை முதல் வாகனங்களில் காய்கறி விற்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் வியாபாரிகள் வண்டி வாடகை கூடுதலாக கொடுக்க வேண்டியுள்ளது. இதனால் காய்கறிகளின் விலை அடுத்த சில நாட்களுக்கு குறைவதாக தெரிய வில்லை என்றார்.

    Next Story
    ×