search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரெயிலில் அனுப்பப்பட்ட ஆக்சிஜன்
    X
    ரெயிலில் அனுப்பப்பட்ட ஆக்சிஜன்

    தமிழகத்துக்கு இதுவரை 440 டன் ஆக்சிஜன் சப்ளை- தெற்கு ரெயில்வே தகவல்

    கேரளா மாநிலத்துக்கு இதுவரை 117.9 டன் ஆக்சிஜன், ரெயில் மூலம் சப்ளை செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே தகவல் தெரிவித்துள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை சமாளிக்க, வடமாநிலங்களில் இருந்து ரெயில்கள் மூலம் ஆக்சிஜன் சப்ளை செய்ய தமிழக அரசு திட்டமிட்டது. அந்த வகையில் தெற்கு ரெயில்வேயின் உதவியோடு, தற்போது ரெயில்கள் மூலம் டேங்கர்களில் தமிழகத்துக்கு ஆக்சிஜன் கொண்டுவரப்படுகிறது.

    கடந்த 14-ந் தேதி அதிகாலை 2 மணிக்கு மேற்கு வங்காளத்தில் 80 டன் ஆக்சிஜனை ஏற்றிக்கொண்டு தமிழகத்துக்கு முதல் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. தொடர்ந்து ஜார்கண்ட், ஒடிசாவில் இருந்து ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் தமிழகத்துக்கு ஆக்சிஜன் டேங்குகள் கொண்டு வரப்பட்டது. இந்தநிலையில், நேற்று முன்தினம் ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் இருந்து 57.46 டன் ஆக்சிஜனும், நேற்று 36.74 டன் ஆக்சிஜனும் ரெயில் மூலம் சென்னை தண்டையார்பேட்டை பணிமனை வந்தடைந்தது.

    மேலும், ரூர்கேலாவில் இருந்து 10-வது லோடாக, 29.24 டன் ஆக்சிஜன் இன்று (வியாழக்கிழமை) கோவை வருகிறது. 78.58 டன் ஆக்சிஜனுடன் 11-வது லோடு ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரெயில் ரூர்கேலாவில் இருந்து நேற்று கிளம்பியுள்ளது.

    இந்தநிலையில் இதுவரை தமிழகத்துக்கு ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் 439.89 டன் ஆக்சிஜன் சப்ளை செய்யப்பட்டுள்ளது. அதேபோல் கேரளா மாநிலத்துக்கு இதுவரை 117.9 டன் ஆக்சிஜன், ரெயில் மூலம் சப்ளை செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே தகவல் தெரிவித்துள்ளது.
    Next Story
    ×