search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம்
    X
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம்

    ஸ்டெர்லைட்டில் இருந்து இன்று மாலை மீண்டும் ஆக்சிஜன் விநியோகம்

    ஸ்டெர்லைட்டில் இருந்து இன்று மாலை முதல் மருத்துவமனைகளுக்கு மீண்டும் ஆக்சிஜன் வினியோகம் தொடங்கப்படும் என ஆலை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
    தூத்துக்குடி:

    கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ஆக்சிஜன் உற்பத்தி செய்ய சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்தது.

    ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் 500 டன் உற்பத்தி திறன் கொண்ட ஒரு பிரிவும், 550 டன் உற்பத்தி திறன் கொண்ட ஒரு பிரிவும் என மொத்தம் 1,050 டன் ஆக்சிஜன் உற்பத்தி திறன் கொண்ட நிலையம் உள்ளது.

    அதில் ஒரு உற்பத்தி பிரிவில் முதற்கட்டமாக ஆக்சிஜன் தயாரிக்கும் பணி கடந்த 12-ந்தேதி தொடங்கியது. அங்கிருந்து மருத்துவ தேவைக்கான ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டது.

    முதற்கட்டமாக உற்பத்தி செய்யப்பட்ட 4.82 மெட்ரிக் டன் நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் 14-ந் தேதி உற்பத்தி நிலையத்தில் உள்ள குளிர்விக்கும் பகுதியில் ஏற்பட்ட பழுதால் ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

    ஆக்சிஜன் சிலிண்டர்

    இதனை தொடர்ந்து இஸ்ரோ மைய வல்லுனர்கள் ஆலோசனையின்படி எந்திரத்தை சரிசெய்யும் பணியில் ஸ்டெர்லைட் நிறுவன தொழில்நுட்ப வல்லுனர்கள் ஈடுபட்டனர். பின்னர் பழுது கண்டு பிடிக்கப்பட்டு அது சரி செய்யப்பட்டது.

    இதையடுத்து மீண்டும் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கான சோதனைகள் தீவிரமாக நடைபெற்றது. எந்திரத்தை இயக்கி சோதனை ஓட்டம் செய்யப்பட்ட பின்னர் நேற்று முதல் திரவ ஆக்சிஜன் உற்பத்தி முறைப்படி தொடங்கியது.

    தொடர்ந்து அவை வாயு நிலைக்கு மாற்றப்படுகிறது. இன்று மாலை முதல் ஸ்டெர்லைட்டில் இருந்து மருத்துவமனைகளுக்கு மீண்டும் ஆக்சிஜன் வினியோகம் தொடங்கப்படும் என ஆலை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    மேலும் அவர்கள் கூறுகையில், முதற்கட்டமாக ஆலையின் ஒரு பிரிவில் இருந்து 35 டன் வரை ஆக்சிஜன் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இது தவிர கூடுதலாக உற்பத்தி செய்யப்படும் வாயு நிலையில் உள்ள ஆக்சிஜனை அதற்கென பிரத்யேகமாக உள்ள பி, டி வகை ஆக்சிஜன் சிலிண்டர்களில் நிரப்பி அனுப்புவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.

    இதற்காக சிலிண்டர்களில் நிரப்பும் வகையில் கட்டமைப்புகளும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்று தெரிவித்தனர்.
    Next Story
    ×