search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தர்ஷினி, ஹரிணி, ரித்தீஷ் ஆகியோர் யோகாசனம் செய்தபோது எடுத்தபடம்.
    X
    தர்ஷினி, ஹரிணி, ரித்தீஷ் ஆகியோர் யோகாசனம் செய்தபோது எடுத்தபடம்.

    சகோதரனுடன் சாதிக்க துடிக்கும் ‘யோகா சகோதரிகள்’- அரசு உதவுமா?

    யோகாவில் தொடர்ந்து பதக்கங்கள் குவித்து வரும் சகோதரிகள், தங்கள் சகோதரனுடன் மேலும் பல சாதனைகளை புரிவதற்கு குறிக்கோள் கொண்டுள்ளனர்.
    திருவாரூர்:

    திருவாரூர் அருகே உள்ள புலிவலம் வில்வனம்படுகை கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன். இவர் மின்வாரியத்தில் மின் கணக்கீட்டு ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி கஸ்தூரி. இவர்களுக்கு தர்ஷினி (வயது13), ஹரிணி (11) ஆகிய 2 மகள்களும், ரித்தீஷ் (7) என்ற மகனும் உள்ளனர்.

    இதில் தர்ஷினி 9-ம் வகுப்பு, ஹரிணி 7-ம் வகுப்பு, ரித்தீஷ் 3-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். கண்ணன் விளையாட்டு துறையில் அதிக ஆர்வம் கொண்டவர். தேசிய அளவில் 3 முறை மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் போட்டியில் பங்கு பெற்றுள்ளார். கஸ்தூரி பள்ளிகளுக்கு இடையிலான மாநில கபடி போட்டியில் பரிசு பெற்றவர்.

    கண்ணன் ஓட்ட பந்தயத்துக்காக தொடர்ந்து பயிற்சி எடுத்ததால் கால் முட்டியில் வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் டாக்டரின் ஆலோசனையின்படி யோகாசனத்தை பயிற்சி செய்தார். இதனால் அவருடைய கால்வலி முற்றிலும் குணமடைந்தது. இதையடுத்து யோகா பயிற்சியாளர் சண்முகம் மூலம் யோகாவை முறையாக கற்றார். அவர் தன்னுடன் மனைவி கஸ்தூரி, மகள்கள், மகனையும் யோகா கற்க செய்தார். இதில் மூத்த மகள் தர்ஷினி சர்வதேச அளவில் 3 பதக்கங்கள், தேசிய அளவில் 11 பதக்கங்கள் உள்பட 110 பதக்கங்களை வென்றுள்ளார். ஹரிணி சர்வதேச அளவில் ஒரு பதக்கமும், தேசிய அளவில் 5 பதக்கம் உள்பட 62 பதக்கங்களை பெற்றுள்ளார். ரித்தீஷ் தேசிய அளவில் 4 பதக்கங்கள் உள்பட 20 பதக்கங்கள் பெற்றுள்ளார்.

    யோகாவில் தொடர்ந்து பதக்கங்கள் குவித்து வரும் சகோதரிகள், தங்கள் சகோதரனுடன் மேலும் பல சாதனைகளை புரிவதற்கு குறிக்கோள் கொண்டுள்ளனர்.

    ஆனால் முறையான யோகா பயிற்சி செய்வதற்கு உடைகள் மற்றும் யோகா மேட் வாங்குவதற்கு கூட வசதியில்லாமல் சிரமப்படுகின்றனர். தரையிலேயே யோகா பழகி பல பதக்கங்களை வென்றதாக கூறும் இவர்கள் யோகாவில் மேலும் சாதனைகளை புரிய அரசு உதவ வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்.

    இதுகுறித்து கண்ணன் கூறுகையில், ‘யோகா என்பது அற்புத கலை. நோயை தீர்க்கும் யோகாவின் மகத்துவத்தை அனைவரிடத்திலும் கொண்டு சேர்க்க வேண்டும். வருங்காலத்தில் தர்ஷினி, ஹரிணி, ரித்தீஷ் ஆகிய 3 பேரும் யோகா மருத்துவம் படித்து நாடு முழுவதும் யோகா கலையை பரவ செய்ய வேண்டும் என்பதே எனது விருப்பம். அதற்கு அரசு உதவித்தொகை வழங்க வேண்டும்’ என கோரிக்கை விடுத்தார்.
    Next Story
    ×