search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பூட்டிக்கிடந்த திருப்பரங்குன்றம் முருகன் கோவில் முன்பு திருமணம் செய்துகொண்ட ஜோடி.
    X
    பூட்டிக்கிடந்த திருப்பரங்குன்றம் முருகன் கோவில் முன்பு திருமணம் செய்துகொண்ட ஜோடி.

    இன்று முகூர்த்த நாள்- பூட்டிய கோவில் முன்பு தாலி கட்டிய மணமக்கள்

    முகூர்த்த நாட்களில் திருப்பரங்குன்றம் கோவிலில் ஏராளமான திருமணங்கள் நடைபெறும். கோவிலை சுற்றியுள்ள திருமண மண்டபங்களும் முகூர்த்த நாட்களில் களைகட்டி காணப்படும்.
    திருப்பரங்குன்றம்:

    பொதுவாக வைகாசி மாதம் திருமணத்திற்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. இந்த மாதத்தில் கோவில்கள் மற்றும் திருமண மண்டபங்களில் ஏராளமான திருமணங்கள் நடைபெறுவது வழக்கம்.

    ஆனால் கொரோனா 2-வது அலை வீசி வருவதால் தற்போது ஊரடங்கு அமலில் உள்ளது. கோவில்கள் அனைத்தும் பூட்டப்பட்டு உள்ளன. திருமணங்களை வீடுகளில் எளிமையான முறையில் நடத்துமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    இன்று வைகாசி முகூர்த்த நாள் என்பதால் தமிழகம் முழுவதும் குறைந்த அளவு உறவினர்களுடன் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டங்கள் இல்லாமல் எளிமையான முறையில் திருமணங்கள் நடைபெற்றன.

    மதுரை திருப்பரங்குன்றத்தில் முருகன், தெய்வானையை திருமணம் செய்து கொண்டதாக ஐதீகம். தெய்வானையுடன் திருமண கோலத்தில் முருகன் காட்சி அளிப்பதால் திருப்பரங்குன்றம் கோவிலில் மதுரை மாவட்டம் மட்டுமல்லாது, பக்கத்து மாவட்டங்களை சேர்ந்தவர்களும் இங்கு திருமணம் நடத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

    மேலும் திருப்பரங்குன்றம் கோவில் திருமண தடை நீக்கும் தலமாகவும் திகழ்கிறது. திருமணம் ஆகாமல் இருப்பவர்கள் இங்கு வேண்டுதல் வைத்து திருமணம் கைகூடியதும் கோவிலில் தாலி கட்டிக்கொள்வார்கள்.

    இதனால் முகூர்த்த நாட்களில் இந்த கோவிலில் ஏராளமான திருமணங்கள் நடைபெறும். கோவிலை சுற்றியுள்ள திருமண மண்டபங்களும் முகூர்த்த நாட்களில் களைகட்டி காணப்படும்.

    ஆனால் தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக திருப்பரங்குன்றம் கோவில் மூடப்பட்டுள்ளது. இதனால் ஏமாற்றம் அடைந்த மணமக்கள் இன்று காலை உறவினர்களுடன் கோவில் முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள் பூட்டிய கோவில் முன்பு தாலி கட்டி மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.

    25-க்கும் மேற்பட்ட மணமக்கள் இன்று திருமணம் செய்து கொண்டனர். இதனால் கோவில் முன்பு பக்தர்கள் கூட்டமாக இருந்தது.

    இதேபோல் மதுரை நேதாஜி ரோட்டில் உள்ள தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் இன்று காலை ஒரு ஜோடியினர் பூட்டிய கோவில் முன்பு அமர்ந்து மந்திரம் ஏதும் இல்லாமல் எளிமையான முறையில் தாலி கட்டி திருமணம் செய்து கொண்டனர். இதில் மணமக்களின் குடும்பத்தை சேர்ந்த குறைந்த அளவு உறவினர்களே கலந்து கொண்டனர்.


    Next Story
    ×