search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துளசி அய்யா வாண்டையார்
    X
    துளசி அய்யா வாண்டையார்

    காங்கிரஸ் முன்னாள் எம்.பி. துளசி அய்யா வாண்டையார் காலமானார்

    மகாத்மா காந்தியின் தீவிர சீடரான துளசி அய்யா வாண்டையார் காந்தி மறைந்த கிழமையான வெள்ளி அன்று வாரந்தோறும் பிற்பகலுக்கு மேல் கடைசி வரை மவுனவிரதம் இருப்பதை தலைமை கடமையாக செய்து வந்தார்.
    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் பூண்டி பகுதியை சேர்ந்தவர் துளசி அய்யா வாண்டையார் (வயது 93). ஒட்டுமொத்த டெல்டா மாவட்டங்களிலும் பூண்டி வாண்டையார் குடும்பத்துக்கு தனி மரியாதை, மதிப்பு பாரம்பரியம் உள்ளது. இவர் 1929-ம் ஆண்டு மே 11-ந் தேதி பிறந்தவர். சமூக பணி, கல்வி, இலக்கியம் என பல துறைகளிலும் ஆழ்ந்த ஈடுபாடும் , அறிவும் கொண்டவர்.

    இவர் சென்னை லயோலா கல்லூரியில் பட்டப்படிப்பு படித்துள்ளார். இவர் தஞ்சை மாவட்டம் பூண்டி கிராமத்தில் பூண்டி புஷ்பம் கலை அறிவியல் கல்லூரியை கடந்த 1956-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது ஒரு தன்னாட்சி கல்லூரி ஆகும். இக்கல்லூரியின் தாளாராக இருந்து நடத்தி வருகிறார். இங்கு வருடந்தோறும் 1000 மாணவர்களுக்கு இலவச உயர்கல்வி அளிக்கப்படுகிறது.
    இக்கல்லூரியில் இதுவரை ஒரு ரூபாய் கூட நன்கொடை பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    பூண்டி துளசி அய்யா வாண்டையார் குடும்பத்துக்கு இப்பகுதியில் 1000 ஏக்கரில் விளைநிலங்கள் உள்ளன. தன்னை ஒரு விவசாயி என சொல்லி கொள்வதில் அலாதி பிரியம் கொண்டவர் இவர் இப்பகுதி மக்களால் கல்வி காவலர், கல்வி வள்ளல் என இன்றளவும் போற்றப்படுகிறார்.

    மகாத்மா காந்தி

    இவர் காந்தியின் தீவிர சீடராவார். காந்திய வழியில் மிகவும் எளிமையாக வாழ்ந்து வந்தார். இவர் கடந்த 1991-96 வரை தஞ்சை மக்களவை தொகுதி காங்கிரஸ் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றினார்.

    அப்போது எம்.பி. பதவிக்கான மத்திய அரசின் எந்த சலுகைகளையும் அவர் பெறவில்லை. தனது சொந்த செலவிலேயே டெல்லி சென்று வந்தார்.

    மகாத்மா காந்தியின் தீவிர சீடரான துளசி அய்யா வாண்டையார் காந்தி மறைந்த கிழமையான வெள்ளி அன்று வாரந்தோறும் பிற்பகலுக்கு மேல் கடைசி வரை மவுனவிரதம் இருப்பதை தலைமை கடமையாக செய்து வந்தார்.

    இந்நிலையில் 93 வயதான துளசி அய்யா வாண்டையார் கடந்த சில நாட்களாக வயது மூப்பு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று காலை அவரது உயிர் பிரிந்தது.

    இதையடுத்து துளசி அய்யா வாண்டையாரின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் பூண்டி கிராமத்துக்கு கொண்டு வரப்பட்டது.

    அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், தொழிலதிபர்கள், சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் என பலர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இன்று மாலை அவரது உடலுக்கு இறுதி சடங்கு நடைபெறுகிறது.

    இறந்த துளசிஅய்யா வாண்டையாருக்கு பத்மாவதி என்ற மனைவியும், கிருஷ்ணசாமி வாண்டையார் என்ற மகனும், புவனேஷ்வரி என்ற மகளும் உள்ளனர்.

    இதில் கிருஷ்ணசாமி வாண்டையார் தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவராக உள்ளார். இவரது மகன் ராமநாதனுக்கு, அ.ம.மு.க. பொது செயலாளர் டி.டி.வி. தினகரனின் மகள் ஜெயஹரினிக்கும் அடுத்த மாதம் திருமணம் நடைபெற உள்ளது.

    இதனால் தனது பேரனின் திருமணத்திற்கான ஏற்பாடுகளை துளசி அய்யா வாண்டையார் முன்னின்று செய்து வந்த நிலையில் அவர் திடீரென இறந்த சம்பவம் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடையே கடும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×