search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்சி பெரியகடை வீதியில் இன்று காலை பொருட்கள் வாங்க திரண்ட கூட்டம்.
    X
    திருச்சி பெரியகடை வீதியில் இன்று காலை பொருட்கள் வாங்க திரண்ட கூட்டம்.

    காந்தி மார்க்கெட் பிரச்சினையால் காய்கறி விலை 2 மடங்கு உயர்வு

    மொத்த வியாபாரத்துக்கு காந்தி மார்க்கெட்டே உகந்தாக வியாபாரிகள் கருதுகின்றனர்.
    திருச்சி:

    திருச்சியில் கொரோனா ஜெட் வேகத்தில் பரவி வருவதால் காந்தி மார்க்கெட்டிற்குள் நடைபெற்று வந்த மொத்த மற்றும் சில்லறை காய்கறி விற்பனை நேற்று இரவு முதல் மேலரண் சாலைக்கு மாற்றப்பட்டது. வியாபாரிகள் இன்று (திங்கட்கிழமை) வழக்கம் போல் சில்லறை விற்பனை மேற்கொண்டனர். பொதுமக்களும் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.

    மொத்த வியாபாரிகள் குறைவான அளவே ஆர்டர்கள் கொடுத்து இருந்ததால் இன்றைய தினம் காய்கறிகளின் விலை இரு மடங்கு உயர்ந்தது. நேற்று முன்தினம் கிலோ ரூ.20-க்கு விற்கப்பட்ட கேரட் ரூ.60-க்கும், பீன்ஸ் ரூ.30-ல் இருந்து ரூ.80 ஆகவும், முருங்கைக்காய் ரூ.20-ல் இருந்து ரூ.50-க்கும், முட்டைக்கோஸ் ரூ.10-ல் இருந்து ரூ.30-க்கும், சவ்சவ் ரூ.10-ல் இருந்து ரூ. 30-க்கும், பீட்ரூட் ரூ.15-ல் இருந்து ரூ. 30-க்கும் விற்கப்பட்டது.

    இந்த திடீர் விலை உயர்வு பொதுமக்களை அதிர்ச்சி அடைய செய்தது. தக்காளி விலையும் ரூ.8-ல் இருந்து ரூ. 15 ஆக உயர்ந்துள்ளது.

    இதுபற்றி காந்திமார்க்கெட் வியாபாரி கமலக்கண்ணன் கூறும்போது, நேற்றைய தினம் மார்கெட்டுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால் இருந்த சரக்கை விற்றோம். மொத்த வியாபாரத்துக்கு காந்தி மார்க்கெட்டே உகந்தாக வியாபாரிகள் கருதுகின்றனர்.

    மொத்த வியாபாரத்திற்கு தற்போது ஒதுக்கப்பட்ட பகுதியில் மளிகை, எள் கடைகள் உள்ளன. அந்த கடைகளுக்கு வந்த லோடு இறக்குவதில் நேற்று இரவு பிரச்சினை ஏற்பட்டது. ஆகவே மொத்த வியாபாரத்தை காந்தி மார்க்கெட்டுக்குள் தொடர மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்க வேண்டும். சில்லறை விற்பனையை வெளியே கூட வைத்து கொள்ளலாம்.

    இதுபோன்ற நெருக்கடியால் மொத்த வியாபாரிகள் இன்று (திங்கட்கிழமை) இரவு நடைபெறும் மொத்த வியாபாரத்துக்கு காய்கறி ஆர்டர்கள் கொடுக்கவில்லை. அவர்கள் வேலை நிறுத்தத்துக்கு தயாராகி வருகின்றனர் என்றார்.

    இதனால் திருச்சியில் காய்கறிகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலை உள்ளது.
    Next Story
    ×