search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை ஐகோர்ட்
    X
    சென்னை ஐகோர்ட்

    தமிழகத்திற்கான தடுப்பூசிகளை வேறு மாநிலங்களுக்கு அனுப்பக்கூடாது- மத்திய அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

    கொரோனா தடுப்பூசி கொள்முதலுக்கு தமிழக அரசு டெண்டர் விடுத்தாலும், மத்திய அரசின் ஒதுக்கீட்டை வேறு மாநிலங்களுக்கு அனுப்பக்கூடாது. டெண்டர் முடிவுக்கு வந்து வினியோகம் தொடங்கிய பிறகே ஒதுக்கீட்டை மத்திய அரசு மறு ஆய்வு செய்யலாம் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    கொரோனா தடுப்பு நடவடிக்கை, ஆக்சிஜன் மற்றும் ரெம்டெசிவிர் மருந்து இருப்பு ஆகியவை குறித்து மத்திய, மாநில அரசுகளிடம் விளக்கம் கேட்டு சென்னை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து ஒரு வழக்கை விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது வக்கீல் நவீன் மூர்த்தி என்பவர் ஆஜராகி, ‘‘சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் 9 பேர் மரணம் அடைந்துள்ளனர். அதுவும் 30 முதல் 45 வயதினர் அதிகம் மரணம் அடைந்துள்ளதால், இளம் வயதினர் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. அரசு ஆஸ்பத்திரிகளில் இடம் இல்லை என்பதால், கொரோனா நோயாளிகளை இறக்க முடியாமல், ஆஸ்பத்திரி வளாகத்தில் ஆம்புலன்ஸ் வாகனங்களில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆம்புலன்ஸ் வாகனங்கள் அப்படியே நிறுத்தப்பட்டு உள்ளதால், பிற நோயாளிகளை ஆஸ்பத்திரிக்கு அழைத்து வர முடியாத நிலை ஏற்படுகிறது’’ என்றார்.

    அப்போது வக்கீல் செந்தில்குமார், ‘மூடப்பட்ட மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிகளை கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்த உத்தரவிட வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தார். இரு வக்கீல்களின் கோரிக்கை குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பியபோது, அதற்கு பதில் அளித்த அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம், ‘‘ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரியில் யாருக்கும் அனுமதி மறுக்கவில்லை. பிற ஆஸ்பத்திரிகளில் இருந்து அனுமதிக்காக வந்து காத்திருந்த நிலையில் சிலர் மரணம் அடைந்துள்ளனர். கொரோனா தடுப்பூசி கொள்முதலுக்கு தமிழக அரசு சர்வதேச டெண்டர் விட உள்ளது. ரெம்டெசிவிர் விற்பனையை சென்னை கீழ்ப்பாக்கத்தில் இருந்து, நேரு உள் விளையாட்டு அரங்கிற்கு மாற்றப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் கவுண்ட்டர்களும் திறக்கப்பட்டுள்ளது’’ என்று கூறினார்.

    இதையடுத்து நீதிபதிகள், ‘‘ஆம்புலன்ஸ் உள்ளே வைத்து சிகிச்சை அளிப்பது ஆஸ்பத்திரிக்கு ஈடாகாது. ஆம்புலன்சில் வெளியில் காத்திருப்பதற்கு பதிலாக டாக்டர் கண்காணிப்பில் ஆஸ்பத்திரி வளாகத்தில் இருப்பது போல சிகிச்சை அளிக்க ஏற்பாடுகளை அரசு செய்ய வேண்டும். அதற்கான கூடுதல் ஸ்ட்ரெக்சர்களை ஏற்படுத்த வேண்டும்.

    போர்க்கால நிலை போல கருதி, கொரோனா பாதித்தவர்களை ஆம்புலன்ஸ்களில் நிறுத்தி வைக்காமல் ஆஸ்பத்திரி வராண்டாக்களில் ஸ்ட்ரெக்சர் மூலம் சிகிச்சை அளிக்க வேண்டும்’’ என்று கூறினர்.

    ‘‘தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை உயர்வாக இருந்தாலும், சதவீதத்தில் குறைந்திருப்பது சற்றே ஆறுதல் தருகிறது. ஆனால் புதுச்சேரியில் எண்ணிக்கை அதிகரிப்பதை கவனத்தில் கொண்டு அரசு செயல்பட வேண்டும். புதுச்சேரியில் 3,800 படுக்கைகள் மட்டுமே உள்ளது. இது போதுமானதல்ல’’ என்றும் நீதிபதிகள் எச்சரித்தனர்.

    மேலும், ‘‘மூடப்பட்ட மருத்துவக்கல்லூரிகளை தற்காலிக கொரோனா சிகிச்சை மையமாக பயன்படுத்தலாம். பாலக்காட்டில் இருந்து தமிழகத்துக்கு வரக்கூடிய 40 டன் அக்சிஜன் நிறுத்தப்பட்டுள்ளது. ஆனாலும், ஆக்சிஜன் ஒதுக்கீட்டின் அளவு 519 டன் என அதிகரிக்கப்பட்டு உள்ளது. பிற மாநிலங்களிலிருந்து ஆக்சிஜன் வருவதால், தற்போது இதுகுறித்து கவலைப்பட தேவையில்லை.

    கொரோனா தடுப்பூசி கொள்முதலுக்கு தமிழக அரசு சர்வதேச டெண்டர் விடுத்தாலும், மத்திய அரசின் ஒதுக்கீட்டை வேறு மாநிலங்களுக்கு அனுப்ப கூடாது. டெண்டர் முடிவுக்கு வந்து சப்ளை தொடங்கிய பிறகே ஒதுக்கீட்டை மத்திய அரசு மறு ஆய்வு செய்யலாம்’’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

    ‘‘தற்போதைய நிலையில் தடுப்பூசி, ரெம்டெசிவிர் மருந்து பற்றாக்குறை இருப்பதையும், அது உயிர் காக்கும் மருந்தல்ல என்பதையும் மக்கள் உணரத் தொடங்கியுள்ளனர்.

    இந்த இக்கட்டான சூழ்நிலையில் அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளில் திருப்தி அளிக்கிறது’’ என்று கூறிய நீதிபதிகள் விசாரணையை வருகிற 17-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர்.
    Next Story
    ×