search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை
    X
    மழை

    குமரி மாவட்டம் முழுவதும் இடி-மின்னலுடன் பலத்த மழை

    திற்பரப்பு அருவி பகுதியில் விட்டு விட்டு மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் அருவியில் வெள்ளம் கொட்டி வருகிறது. அருவியில் குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்படாததால் திற்பரப்பு அருவி வெறிச்சோடி காணப்படுகிறது.
    நாகர்கோவில்:

    தென்கிழக்கு அரபி கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் குமரி மாவட்டத்தில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் குமரி மாவட்டம் முழுவதும் நேற்று மாலை முதலே பரவலாக மழை பெய்து வருகிறது. முள்ளங்கினாவிளை பகுதியில் நேற்று இரவு இடி, மின்னலுடன் கன மழை கொட்டித்தீர்த்தது. சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக இடைவிடாது மழை பெய்தது. இங்கு அதிகபட்சமாக 95 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    நாகர்கோவிலிலும் இரவு கன மழை கொட்டித்தீர்த்தது. இன்று காலையும் வானத்தில் கருமேகங்கள் திரண்டு காணப்பட்டது. திடீரென பலத்த மழை பெய்தது. இதனால் ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    கோழிப்போர்விளை, புத்தன்அணை, அடையாமடை, மைலாடி, கொட்டாரம் திருவட்டாறு, பொன்மனை, குற்றியாறு, களியல், பூதப்பாண்டி, இரணியல், தக்கலை பகுதிகளிலும் இடி, மின்னலுடன் மழை பெய்தது. நள்ளிரவு கொட்டித்தீர்த்த மழையின் காரணமாக பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்பட்டது. இதனால் பல கிராமங்கள் இருளில் மூழ்கியது.

    திற்பரப்பு அருவி பகுதியில் விட்டு விட்டு மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் அருவியில் வெள்ளம் கொட்டி வருகிறது. அருவியில் குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்படாததால் திற்பரப்பு அருவி வெறிச்சோடி காணப்படுகிறது.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை- 16, பெருஞ்சாணி- 48.6, சிற்றாறு1-22, சிற்றாறு2- 46, மாம்பழத்துறையாறு- 75.4, நாகர்கோவில்-30, சுருளோடு- 31.4, கன்னிமார்- 3.4, மைலாடி- 35.2, கொட்டாரம்- 5.8, இரணியல்- 15, ஆணைக்கிடங்கு- 61.4, குளச்சல்- 8.2, அடையாமடை - 33, கோழிப்போர் விளை- 80, முள்ளங்கினாவிளை- 95, புத்தன்அணை- 47.8, திற்பரப்பு-13.

    மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதியிலும் மழை கொட்டித்தீர்த்து வருகிறது.

    இதனால் அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்து உள்ளது. அணைகளின் நீர் மட்டமும் வெகுவாக உயர்ந்து வருகிறது.

    பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 41.57 அடியாக இருந்தது. அணைக்கு 208 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 123 கன அடி தண்ணீர் குடிநீருக்காக திறக்கப்பட்டுள்ளது.

    பெருஞ்சாணி அணையின் நீர் மட்டம் 54.75 அடியாக உள்ளது. அணைக்கு 254 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சிற்றாறு1 அணையின் நீர்மட்டம் 7.28 அடியாகவும், சிற்றாறு2 அணையின் நீர்மட்டம் 7.38 அடியாகவும், பொய்கை அணையின் நீர்மட்டம் 14.90 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணையின் நீர் மட்டம் 18 அடியாகவும் உள்ளது.
    Next Story
    ×