search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வழக்கறிஞர் சண்முகசுந்தரம்
    X
    வழக்கறிஞர் சண்முகசுந்தரம்

    ஏராளமான வழக்குகளில் திறம்பட வாதாடியவர் அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம்

    2002-ம் ஆண்டு மேல்சபை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்ட இவர் 6 ஆண்டுகள் அப்பதவியில் தொடர்ந்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

    சென்னை:

    தமிழக அட்வகேட் ஜெனரலாக மூத்த வக்கீல் ஆர். சண்முக சுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார்.

    மாநில அட்வகேட் ஜெனரல் பதவி என்பது மிகவும் முக்கியமான பதவிகளில் ஒன்றாகும். இப்பதவியில் நியமிக்கப்படும் மூத்த வக்கீல், மாநில அரசுகளுக்கு சட்டரீதியான ஆலோசனை வழங்குவதுடன், தலைமை வக்கீலாகவும் செயல்படுவார்.

    அந்த வகையில், அ.தி.மு.க., ஆட்சிகாலத்தில் மூத்த வக்கீல் விஜய் நாராயண் அட்வகேட் ஜெனரலாக பதவி வகித்தார். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன், அவர் தன் பதவியை ராஜினாமா செய்தார்.

    இந்த நிலையில் காலியாக இருக்கும் அட்வகேட் ஜெனரல் பதவிக்கு தி.மு.க.வைச் சேர்ந்த மூத்த வக்கீல் ஆர்.சண்முகசுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார்.

    இவர், தி.மு.க. ஆட்சி காலத்தில் 1989-91-ம் ஆண்டுகளில் கூடுதல் குற்றவியல் வக்கீலாகவும், 1996-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை மாநில தலைமை அரசு குற்றவியல் வக்கீலாகவும் பதவி வகித்தவர்.

    1953-ம் ஆண்டு அக்டோபர் 29ந்தேதி நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையில் பிறந்தார். இவரது பெற்றோர் எஸ்.ராஜகோபால், ரங்கநாயகி ஆவர்.

    இவர் தந்தை எஸ். ராஜகோபால் மதுரை மாவட்ட அரசு குற்றவியல் வக்கீலாக பதவி வகித்தவர்.

    மூத்த வக்கீல் சண்முகசுந்தரம் சட்டப்படிப்பை முடித்துவிட்டு, 1977-ம் ஆண்டு வக்கீலாக பதிவு செய்தார். மூத்த வக்கீல் என். நடராஜனிடமும், தந்தை எஸ்.ராஜகோபாலிடமும் ஜூனியராக பணியாற்றினார்.

    இவர் ஏராளமான சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளில் ஆஜராகி திறம்படவாதம் செய்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை சம்பவம் குறித்து அமைக்கப்பட்ட ஜெயின் கமி‌ஷனில், இவர் தமிழக அரசின் சார்பில் வக்கீலாக ஆஜராகி வாதம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    கடந்த 1995-ம் ஆண்டு ஜெயலலிதா மீது ஊழல் வழக்கு போடுவது தொடர்பான பணியில் ஈடுபட்டிருந்தபோது, கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் வைத்து மர்ம நபர்களால் தாக்கப்பட்டார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் தீவிர சிகிச்சைக்கு பின்னர் மீண்டு வந்தார்.

    இந்த தாக்குதலில் வக்கீல் சண்முக சுந்தரத்தின் ஜூனியர் வக்கீல்கள் இருவரும் காயம் அடைந்து இருந்தனர். அப்போது இந்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது.

    2002-ம் ஆண்டு மேல்சபை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்ட இவர் 6 ஆண்டுகள் அப்பதவியில் தொடர்ந்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

    ஹாங்காங்கில் நடந்த சர்வதேச சட்ட கருத்தரங்கிலும் சண்முகசுந்தரம் கலந்து கொண்டு பங்கேற்றுள்ளார்.

    Next Story
    ×