search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்டெர்லைட் ஆலையில் கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையிலான கண்காணிப்பு குழுவினர் ஆய்வு
    X
    ஸ்டெர்லைட் ஆலையில் கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையிலான கண்காணிப்பு குழுவினர் ஆய்வு

    ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்துக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் கலெக்டர் தலைமையிலான கண்காணிப்பு குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து ஆலையில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்துக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது.
    தூத்துக்குடி:

    நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. தினமும் ஏராளமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் ஆக்சிஜன் தேவை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் இருக்கும் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை இயக்க அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட்டு கடந்த மாதம் 27-ந்தேதி தீர்ப்பு அளித்தது.

    தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை இயக்க அனுமதி அளித்து தமிழக அரசு சார்பில் கடந்த 29-ந்தேதி அரசாணை வெளியிடப்பட்டது. மேலும், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்பேரில், ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை கண்காணிப்பதற்காக மாவட்ட கலெக்டர் தலைமையிலான கண்காணிப்புக்குழுவும் அமைத்து அரசு உத்தரவிட்டது.

    சுப்ரீம் கோர்ட்

    இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, தேவையான அனுமதிகளை வழங்கினர். மேலும், தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் மின் இணைப்பு வழங்குவது தொடர்பாக ஆய்வுகளை நடத்தினர்.

    இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை கண்காணிப்பதற்காக அமைக்கப்பட்ட கண்காணிப்பு குழு கூட்டம், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலையில் நடந்தது. கண்காணிப்பு குழு தலைவரும், மாவட்ட கலெக்டருமான செந்தில்ராஜ் தலைமை தாங்கினார்.

    குழுவின் உறுப்பினர்களான மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், தூத்துக்குடி உதவி கலெக்டர் சிம்ரன் ஜீத்சிங் கலோன், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் மாவட்ட சுற்றுச்சூழல் என்ஜினீயர் சத்யராஜ், தூத்துக்குடி அனல்மின் நிலைய முதன்மை துணை வேதியலாளர் ஜோசப் பெல்லார்மின் அண்டன் சோரிஸ், சுற்றுச்சூழல் நிபுணர்கள் அமர்நாத், கனகவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை தொடங்குவது குறித்தும், அங்கு தேவையான பணியாளர்களை அனுமதிப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

    தொடர்ந்து மாவட்ட கலெக்டர் செந்தில் ராஜ் தலைமையிலான குழுவினர், ஸ்டெர்லைட் ஆலைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அங்கு ஆக்சிஜன் தயாரிப்பு நிலைய பகுதி, ஆக்சிஜன் தயாரிப்பு பகுதியில் இருந்து மற்ற பகுதிகளுக்கு பணியாளர்கள் யாரும் செல்லாத வகையில் தகரம் மூலம் பாதுகாப்பு தடுப்புகள் அமைப்பது தொடர்பாகவும், குடிநீர் வடிகால் வாரியம் மூலம் குடிநீர் வழங்குவது தொடர்பாகவும், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மூலம் ஆக்சிஜன் உற்பத்தி நிலைய பகுதிக்கு மட்டும் மின்சாரம் வழங்குவது தொடர்பாகவும் ஆய்வு செய்தனர்.

    மேலும் ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலைய பகுதிக்கு வரும் பணியாளர்களை எந்த பாதையில் உள்ளே அனுமதிப்பது? என்பது குறித்தும், ஆக்சிஜன் ஆலையில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை ஏற்றிச்செல்லும் கனரக வாகனங்கள் வந்து செல்வதற்காக தனியான பாதை அமைப்பது குறித்தும் ஆய்வு செய்தனர்.

    தொடர்ந்து ஆலைக்கு மின்சார வசதி செய்யப்பட்ட பின்பு எத்தனை நாட்களில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முடியும்? என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர். ஆக்சிஜன் உற்பத்தியை விரைவில் தொடங்கும் வகையில் மின்சார இணைப்பு வழங்கவும், குடிநீர் இணைப்பு வழங்கவும் துரிதமாக நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கண்காணிப்பு குழுவினர் உத்தரவிட்டனர்.

    பின்னர் கலெக்டர் செந்தில்ராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்பேரில், ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் ஆக்சிஜன் உற்பத்திக்கு மட்டும் தேவையான அனுமதிகளை வழங்கும் பணிகளை மின்சார வாரியம், குடிநீர் வடிகால் வாரியம், மாநகராட்சி, தீயணைப்புத்துறை, தொழிற்சாலை பாதுகாப்பு துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் போன்ற பல்வேறு துறைகள் விரைவுபடுத்தி உள்ளன. ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை இயக்கும் பணியில் ஈடுபட உள்ள பணியாளர்கள் பட்டியலை ஸ்டெர்லைட் நிறுவனம் வழங்கி உள்ளது.

    இந்த பட்டியலை கண்காணிப்புக் குழுவில் உள்ள தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆய்வு செய்து, அவர்கள் ஆலைக்குள் செல்ல அனுமதி அளிப்பார்கள். ஆக்சிஜன் உற்பத்திக்கு தேவையான அளவில் மட்டும் மின்சாரம் மற்றும் குடிநீர் வழங்கப்படும். அனைத்து அனுமதிகளும் வழங்கப்பட்டதும், மின்சாரம் மூலம் அனைத்து எந்திரங்களும் இயக்கி பரிசோதனை செய்யப்படும்.

    தொடர்ந்து ஆலையில் பாதுகாப்பு ஆய்வு நடத்தப்படும். பாதுகாப்பு ஆய்வு முடிந்ததும் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கப்படும். இன்னும் 7 நாட்களில் ஸ்டெர்லைட் ஆலையில் மருத்துவ பயன்பாட்டுக்கான ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    பின்னர் மாலையில் கண்காணிப்பு குழுவினர் மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து தமிழ்நாடு மின்சார வாரியம் மூலம் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது. இதையொட்டி ஸ்டெர்லைட் ஆலை முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    இதுகுறித்து ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் கண்காணிப்பு குழுவினர் ஆய்வு செய்தனர். தொடர்ந்து ஆக்சிஜன் உற்பத்திக்கு தேவையான மின் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. இதனை வரவேற்கிறோம்.

    தொடர்ந்து உடனடியாக ஆக்சிஜன் உற்பத்தி தொடங்குவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
    Next Story
    ×