search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    சென்னை சம்பவம் போல நடந்த விபத்து - ஸ்கூட்டரில் சென்ற பெண் பேனர் விழுந்து பலி

    சாலை ஓரங்களில் பேனர் வைக்கக்கூடாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டும் அதை மீறி பேனர் வைத்ததால் இந்த விபத்து நடந்து இருக்கிறது.

    திருவோணம்:

    கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னை பள்ளிக்கரணை சுற்றுச்சாலையில் ஸ்கூட்டரில் சென்ற சுபாஷினி (வயது 24) என்ற பெண் பேனர் விழுந்து பலியானார்.

    அ.தி.மு.க. பிரமுகர் ஒருவர் வைத்திருந்த பேனர் அவர் மீது விழுந்ததால் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்போது பின்னால் வந்த லாரி மோதி அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதேபோன்ற சம்பவம் ஒன்று இப்போது தஞ்சை மாவட்டம் திருவோணம் அருகே நடந்துள்ளது.

    தஞ்சை மாவட்டம் திருவோணம் அருகே உள்ள மேல மேட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். கடந்த சில தினங்களுக்கு முன்பு இவரது தந்தை முத்துவீரப்பன் இறந்து விட்டார்.

    இதையடுத்து மேல மேட்டுப்பட்டி நெடுஞ்சாலையில் தனது தந்தையின் படத்திறப்பு விழாவிற்கு மிகப் பிரமாண்டமான அளவில் ரவிச்சந்திரன் பேனர் வைத்தார்.

    இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடி அம்மணி பட்டு கிராமத்தை சேர்ந்த சாமிக்கண்ணு மனைவி விஜயராணி என்பவர் இதே கிராமத்தில் உள்ள தனது சகோதரர் வீட்டிற்கு சென்றுவிட்டு ஊர் திரும்பினார்.

    அப்போது அந்த வழியாக ஸ்கூட்டரில் வந்த வாலிபரிடம் லிப்ட் கேட்டு ஏறி வந்துள்ளார். மேலமேட்டுப் பட்டி பகுதியில் வந்தபோது ரவிச்சந்திரன் வைத்திருந்த பிரமாண்டமான பேனர் திடீரென விஜயராணி மீது சரிந்து விழுந்தது.

    இதில் பலத்த காயமடைந்த விஜயராணியை மீட்டு தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் பலத்த காயமடைந்த விஜயராணி தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். எனினும் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார்.

    தகவலின்பேரில் திருவோணம் போலீசார் பேனரை கைப்பற்றி ரவிச்சந்திரன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    சென்னை உயர்நீதிமன்றம் சாலை ஓரங்களில் பேனர் வைக்கக்கூடாது என உத்தரவிட்டும் சரியான விதிமுறைகளை கடைபிடிக்காததே இதுபோன்ற விபத்துக்கு காரணம் என அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    சாலை ஓரங்களில் பேனர் வைக்கக்கூடாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டும் அதை மீறி பேனர் வைத்ததால் இந்த விபத்து நடந்து இருக்கிறது.

    Next Story
    ×