search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடியதால் சாலையில் ஆடுகள் படுத்து ஓய்வெடுக்கும் காட்சி.
    X
    வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடியதால் சாலையில் ஆடுகள் படுத்து ஓய்வெடுக்கும் காட்சி.

    முழு ஊரடங்கால் முடங்கிய மக்கள்- புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கரூர் மாவட்டங்கள் வெறிச்சோடின

    முழு ஊரடங்கில் மக்கள் தேவையின்றி வெளியில் சுற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறை கடுமையாக எச்சரித்துள்ளது.

    திருச்சி:

    கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த தமிழக அரசு அறிவித்துள்ள ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு இன்று அமலானது. முதல் அலையின் தாக்கத்தை விட இரண்டாவது அலையின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மக்கள் அஜாக்கிரதையாக இருக்க கூடாது என்று அரசு தொடர்ந்து வலியுறுத்துவதோடு, அனைவரும் தடுப்பூசி போட்டுககொள்ளவும் அறிவுரை வழங்கியுள்ளது.

    முழு ஊரடங்கில் மக்கள் தேவையின்றி வெளியில் சுற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறை கடுமையாக எச்சரித்துள்ளது. இதனை ஏற்று அரியலூர், பெரம்பலூர், கரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.

    அரியலூர் மாவட்டத்திற்குட்பட்ட தா.பழுர், உடையார்பாளையம், மீன்சுருட்டி, ஆண்டிமடம், ஜெயங்கொண்டம் உள்பட மாவட்டம் முழுவதும் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன. கார், வேன், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் இயக்கப்படவில்லை.

    பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறி, இறைச்சி உள்ளிட்டவைகளை நேற்று வாங்கி வைத்துக் கொண்டனர். இதனால் நேற்று இரவு வரை அனைத்து கடைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. இன்று அதற்கு நேர்மாறாக சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

    திருமானூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏலாக்குறிச்சி, கல்லூர், கீழப்பளூர், திருமழபாடி ஆகிய ஊர்களில் கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டு மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. மருத்துவமனை, தனியார் மருந்து கடைகள், பெட்ரோல் பங்க் ஆகிய அத்தியாவசிய கடைகளை தவிர நிறுவனங்களைத் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.

    புதுக்கோட்டை மாநகரில் கீழராஜவீதி, மேல ராஜ வீதி, பெரிய கடை வீதி, கீழ மூன்றாம் வீதி பெருமாள் கோவில் மார்க்கெட், பழைய, புதிய பேருந்து நிலையங்கள், உழவர் சந்தை, மீன் மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. மாவட்டத்திற்குட்பட்ட அறந்தாங்கி, ஆவுடையார் கோவில், கந்தர்வக்கோட்டை, ஆலங்குடி, திருமயம், பொன்னமராவதி, விராலிமலை, இலுப்பூர், அன்னவாசல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஒட்டுமொத்த கடைகளும் அடைக்கப்பட்டன.

    கரூர் மாவட்டத்திற்குட்பட்ட குளித்தலை, அரவக்குறிச்சி, வேலாயுதம்பாளையம், லாலாப்பேட்டை, கிருஷ்ணராயபுரம், மாயனூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன. கரூர் நகரில் ஜவஹர் பஜார், வெங்கமேடு, காமராஜ் மார்க்கெட், தாந்தோணிமலை, சுங்ககேட், லைட்ஹவுஸ் கார்னர், கோவை சாலை உள்ளிட்ட பகுதிகளில் 100 சதவீத கடைகள் அடைக்கப்பட்டன.

    அதேபோல் ஆயத்த ஆடை நிறுவனங்கள், டெக்ஸ்டைல் தொழிற்சாலைகள், கொசு வலை உற்பத்தி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்தும் இன்று மூடப்பட்டிருந்தன. மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் போலீசார் கூடுதலாக சோதனைச் சாவடிகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    பெரம்பலூர் மாவட்டத்திற்குட்பட்ட லெப்பைக்குடிக் காடு, அரும்பாவூர், ஆலத்தூர், குன்னம், வேப்பூர், செட்டிக்குளம், அம்மாப்பாளையம், வேப்பந்தட்டை, பாடாலூர் உள்பட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன.

    பெரம்பலூர் நகரில் புதிய மற்றும் பழைய பேருந்து நிலையம், என்.எஸ்.பி. ரோடு, கடை வீதி, திருச்சி ரோடு, ஆத்தூர் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டன.

    சுய ஊரடங்கை கடைபிடிக்கும் வகையில் பொதுமக்களும் வீடுகளுக்குள்ளேயே இருந்தனர். இதனால் நகர் பகுதி முழுவதும் பொதுமக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. ஒரு சில மருந்து கடைகள் மட்டும் திறக்கப்பட்டிருந்தன. 5 மாவட்டங்களிலும் போலீசார் முக்கிய இடங்களில் அதிரடி வாகன சோதனை நடத்தினர். அப்போது விதிகளை மீறி வந்தவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×