search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பரபரப்பாக காணப்படும் திருப்பூர் பல்லடம் சாலை மேம்பாலம் வெறிச்சோடி கிடந்ததை படத்தில் காணலாம்.
    X
    பரபரப்பாக காணப்படும் திருப்பூர் பல்லடம் சாலை மேம்பாலம் வெறிச்சோடி கிடந்ததை படத்தில் காணலாம்.

    பொதுமக்கள் நடமாட்டமின்றி அமைதியாக காட்சியளித்த திருப்பூர்

    முழு ஊரடங்கு காரணமாக திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் பொதுமக்கள் நடமாட்டமின்றி அமைதியாக காட்சியளித்தன.

    திருப்பூர்:

    முழு ஊரடங்கு காரணமாக திருப்பூர் மாநகரில் பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், ஊத்துக்குளி ரோடு உள்ளிட்ட மாநகரின் அனைத்து பகுதிகளிலும் மளிகை, ஷாப்பிங் கடைகள் உள்பட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. பஸ், கார், வேன், ஆட்டோக்கள் இயங்கவில்லை.

    ஓட்டல்களில் குறிப்பிட்ட நேரத்தில் பார்சல் சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்ட போதிலும் பல்வேறு இடங்களில் ஒரு சில ஓட்டல்கள் மட்டுமே திறக்கப்பட்டிருந்தன. பெரும்பாலான ஓட்டல்கள் அடைக்கப்பட்டன. டீக்கடைகளும் மூடப்பட்டன. இதனால் விடுதிகளில் தங்கியிருந்தவர்கள் சாப்பாடு வாங்க முடியாமல் தவிப்புக்கு உள்ளாகினர்.

    தாராபுரம் ரோடு, அவிநாசி ரோடு, காங்கேயம் ரோடு, பல்லடம் ரோடு ஆகிய பகுதிகளில் போலீசார் சோதனை சாவடிகள் அமைத்து கண்காணிப்பில் ஈடுபட்டனர். 24 ரோந்து வாகனங்கள் மூலம் மாநகரம் முழுவதும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    தெரு பகுதிகளிலும் சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தெருக்களில் நடமாடிய பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தி வீட்டிற்குள் செல்லுமாறு அறிவுறுத்தினர்.

    திருப்பூர் மாநகர போலீஸ் கமி‌ஷனர் கார்த்திக்கேயன் உத்தரவின் பேரில் துணை கமி‌ஷனர் சுரேஷ்குமார் மேற்பார்வையில் 4 உதவி கமி‌ஷனர்கள், 5 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 500க்கும் மேற்பட்ட போலீசார் மாநகரம் முழுவதும் பாதுகாப்பு மற்றும் சோதனை பணியில் ஈடுபட்டனர்.

    மாநகரில் உள்ள மேம்பாலங்களில் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டன. சரக்கு வாகனங்கள் அனைத்தும் தீவிர சோதனை நடத்தப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டன. பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் சப்ளைக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த பொருட்களை கொண்டு செல்பவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி அனுப்பி வைத்தனர்.

    திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கு செல்பவர்களிடம் பத்திரிகைகளை வாங்கி பார்த்து அனுப்பினர். தேவையற்ற காரணங்களுக்காக வந்தவர்களை போலீசார் எச்சரிக்கை செய்து அனுப்பிவைத்தனர். சிலருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. திருப்பூர் மாநகரை பொறுத்தவரை முழு ஊரடங்கு முழுமையாக கடைப்பிடிக்கப்பட்டது.

    கடைகள் அடைப்பு, பொதுமக்கள் நடமாட்டம் இல்லாததால் மாநகர் பகுதியானது வெறிச்சோடி காணப்பட்டதுடன் மிகவும் அமைதியாக காட்சியளித்தது.

    திருப்பூர் மாநகரில் ஏராளமான பின்னலாடை நிறுவனங்கள் உள்ளன. இரவு ஊரடங்கு காரணமாக பெரும்பாலான நிறுவனங்கள் 2ஷிப்ட் முறையில் இயங்கி வருகின்றன. இந்தநிலையில் சிறு, குறு தொழில்களுக்கு ஊரடங்கில் விலக்கு அளிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று திருப்பூர் மாநகரில் பின்னலாடை நிறுவனங்கள் இயங்கவில்லை. விடுதி வசதி உள்ளவர்கள் நிறுவனங்களை இயக்கி கொள்ளலாம் என்று உத்தரவிடப்பட்டு இருந்தது. ஆனால் பெரும்பாலான தொழிலாளர்கள் வெளியிடங்களில் இருந்து வருவதால் பின்னலாடை நிறுவனங்கள் அனைத்தும் அடைக்கப்பட்டன. இதனால் ரூ.100 கோடி அளவுக்கு பின்னலாடை உற்பத்தி பாதிக்கப்பட்டது.

    விடுதி வசதி உள்ள ஒரு சில நிறுவனங்கள் மட்டும் தொழிலாளர்களுடன் இயங்கியது. இதேப்போல் மாவட்டத்திற்குட்பட்ட பல்லடம், தாராபுரம், காங்கேயம், வெள்ளகோவில், உடுமலைப்பேட்டை, குண்டடம், மூலனூர், குடி மங்கலம், மடத்துக்குளம், குன்னத்தூர் உள்பட மாவட்டம் முழுவதும் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. முழு ஊரடங்கு முழுமையாக கடைப்பிடிக்கப்பட்டது. அந்தந்த பகுதி போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    பல்லடத்தில் பஸ் நிலையம், கடை வீதி உள்ளிட்ட இடங்களில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. பரபரப்பாக இயங்கும் கோவை -திருச்சி சாலை வெறிச்சோடி காணப்பட்டது.

    தாராபுரத்தில் இன்ஸ்பெக்டர் மகேந்திரன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெயகுமார், கார்த்திக்கேயன் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வாக்கிங் சென்றவர்களுக்கு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தி வீடுகளுக்கு செல்லுமாறு அறிவுறுத்தினர்.

    Next Story
    ×