search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முழு ஊரடங்கு காரணமாக எப்போதும் பரபரப்பாக காணப்படும் சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலம் வெறிச்சோடிய காட்சி.
    X
    முழு ஊரடங்கு காரணமாக எப்போதும் பரபரப்பாக காணப்படும் சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலம் வெறிச்சோடிய காட்சி.

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் முழு ஊரடங்கால் வெறிச்சோடிய சாலைகள்

    தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரடங்கை கண்காணிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் சுமார் 2,000 போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    நெல்லை:

    தமிழகத்தில் கொரோனா 2-ம் அலை மிக வேகமாக பரவி வருகிறது.

    இதனை தடுக்க 7 மாதங்களுக்கு பின்னர் தமிழகத்தில் மீண்டும் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.

    முழு ஊரடங்கு நாளான இன்று நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் வணிக நிறுவனங்கள், தியேட்டர்கள், காய்கறி மார்க்கெட்டுகள், மீன், இறைச்சி கடைகள், மதுபான கடைகள், மால்கள், பார்கள், ஓட்டல்கள், டீக்கடைகள், மளிகை கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தது.

    எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் பாளை உழவர் சந்தை, டவுன் மார்க்கெட்டுகள், நயினார்குளம் மார்க்கெட் உள்ளிட்ட மார்க்கெட்டுகள் மூடப்பட்டதால் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடியது.

    ஊரடங்கையொட்டி நேற்றே அனைத்து பகுதிகளிலும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறி, மளிகை பொருட்களை வாங்கி சென்றனர்.

    நெல்லை மாவட்டத்தில் முழு ஊரடங்கை கண்காணிக்க மாநகர பகுதியில் துணை கமி‌ஷனர் மகேஷ் குமார், சீனிவாசன் தலைமையில் 1100 போலீசாரும், புறநகரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் தலைமையில் 1700 போலீசார் என மொத்தம் 2800 போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    மாவட்டத்தில் காவல் கிணறு, திசையன்விளை, சீதபற்பநல்லூர், வன்னிக் கோனேந்தல், கங்கை கொண்டான், கிருஷ்ணா புரம், கே.டி.சி. நகர் ஆகிய 7 நிரந்தர சோதனைச் சாவடிகள் மற்றும் மாநகரில் மேலப்பாளையம் கருங்குளம், கரையிறுப்பு, கே.டி.சி.நகர், டக்கரம் மாள்புரம், பழையபேட்டை, வி.எம்.சத்திரம் ஆகிய 6 நிரந்தர சோதனை சாவடிகள் மற்றும் 17 தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    ஊரடங்கின் போது அத்தியாவசிய தேவைகளான மருத்துவம், பால், பத்திரிகை, ஆம்புலன்ஸ் உள்ளிட்ட சேவைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் 50 பேருடன் நடைபெற அனுமதி வழங்கப்பட்டது.

    சாலைகளில் தேவையில்லாமல் வாகனங்களில் சுற்றி திரிந்தவர்களை பிடித்து போலீசார் அபராதம் விதித்தனர். மேலும் சிலரது வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    முழு ஊரடங்கையொட்டி வாகனங்கள் செல்லாததால் மாநகரில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் டவுன் எஸ்.என்.ஹைரோடு, ஈரடுக்கு மேம்பாலம், சந்திப்பு, வண்ணார்பேட்டை, பாளை, சமாதானபுரம், மார்க்கெட், தச்சநல்லூர், மேலப்பாளையம், கே.டி.சி.நகர் உள்ளிட்ட பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டது.

    இதே போல் மாவட்டத்தில் அம்பை, களக்காடு, ராதாபுரம், கல்லிடைக்குறிச்சி, நாங்குநேரி, களக்காடு, திசையன்விளை, உவரி உள்ளிட்ட இடங்களிலும் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி அமைதியாக காணப்பட்டது. புறநகர் பகுதியிலும் சிலர் ஊரடங்கை மீறி வாகனங்களில் சுற்றிதிரிந்தனர். அவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்து, வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரடங்கை கண்காணிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் சுமார் 2,000 போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    தூத்துக்குடி, கோவில்பட்டி, திருச்செந்தூர், விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், ஸ்ரீவைகுண்டம், நாசரேத், உடன்குடி, சாத்தான்குளம், எட்டயபுரம், ஆறுமுகநேரி, காயல்பட்டினம், தென்திருப் பேரை, குரும்பூர், ஆழ்வார் திருநகரி, போன்ற முக்கிய பகுதிகளில் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

    உடன்குடியில் மெயின்பஜார், 4 பஜார் வீதிகள், சத்தியமூர்த்தி பஜார், வில்லி குடியிருப்பு சந்திப்பு, பஸ் நிலையம் ஆகிய பகுதிகள் வெறிச்சோடியது. தினசரி மார்க்கெட் முழுமையாக மூடப்பட்டது.

    தென்காசி மாவட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங் தலைமையில் 1,500 போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டடனர்.

    புளியரை சோதனை சாவடியில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. முழு ஊரடங்கால் தென்காசியில் எப்போதும் பரபரப்பாக காணப்படும், சுவாமி சன்னதி, அம்மன் சன்னதி, கூலக்கடை பஜார், தெற்கு பஜார், மவுன்ட் ரோடு உள்ளிட்ட பகுதிகள் வெறிச்சோடியது. 

    Next Story
    ×