search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    திருச்சி மாவட்டத்தில் இன்று முழு ஊரடங்கு 1 லட்சம் கடைகள் அடைப்பு - ரூ.3 ஆயிரம் கோடி வியாபாரம் பாதிப்பு

    காய்கறி, ஜவுளி, இறைச்சி, டீ, மளிகைக்கடைகள் அனைத்தும் இன்று முழு ஊரடங்கில் பங்கேற்பதால் ஒருநாள் மட்டும் திருச்சி மாவட்டத்தில் ரூ.3 ஆயிரம் கோடிக்கு வியாபாரம் பாதிக்கப்பட்டு இருப்பதாக வணிகர்கள் தெரிவித்தனர்.

    திருச்சி:

    நாடு முழுவதும் கடந்த 2 மாதமாக கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவத் தொடங்கியது. கடந்த பிப்ரவரி மாதம் வரை தமிழகத்தில் கொரோ னா பாதிப்பு கட்டுக்குள்ளேயே இருந்தது. தினமும் 500 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். திருச்சியில் தினசரி பாதிப்பு 20-க்கும் குறைவாகவே இருந்தது.

    இந்த நிலையில் கடந்த மாதம் முதல் தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை மிக வேகமாக பரவத் தொடங்கியது. தற்போது தமிழகத்தில் தினசரி பாதிப்பு 14 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

    அதிகபட்சமாக சென்னையில் தினசரி பாதிப்பு 4,000-ஐ கடந்துள்ளது. திருச்சியிலும் 350-ஐ தாண்டியுள்ளது. நேற்று சற்றே ஆறுதல் தரும் வகையில் 302 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருவதால் தமிழகத்தில் கடந்த 20-ந்தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணிவரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கிறது.

    இந்தநிலையில் 7 மாதங்களுக்கு பிறகு மீண்டும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட உள்ளது. அதன்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதன் முதலாக முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.

    அதன்படி மாநிலம் முழுவதும் நேற்று இரவு 10 மணி முதல் நாளை அதிகாலை 4 மணி வரை முழு ஊரடங்கு அமலாகிறது. முழு ஊரடங்கை தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து வர்த்தக நிறுவனங்களும் மூடப்பட்டன. தொழிற்சாலைகள் மூடப்பட்டன. அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் அடைக்கப்பட்டு இருந்தன.

    அத்தியாவசிய தேவைகளான பால் விற்பனை நிலையங்கள், மருந்தகங்கள் மட்டுமே திறந்திருந்தன. காய்கறி, மளிகை கடைகள், உணவகங்கள் என அனைத்து கடைகளும் மூடப்பட்டன. அதேபோன்று டாஸ்மாக் மதுபான கடைகளும் அடைக்கப்பட்டன. இதனால் திருச்சி மாவட்டமே முடங்கியது. பெட்ரோல் பங்க்குகள் இயங்கின.

    திருச்சி மாநகரில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன. புறநகரில் 30 ஆயிரம் கடை கள் அடைக்கப்பட்டன. மாநகரை பொறுத்தமட்டில் பரபரப்பாக காணப்படும் திருச்சி மத்திய பஸ் நிலையம், சத்திரம் பஸ் நிலையம் மற்றும் காந்தி மார்க்கெட் பகுதி, பாலக்கரை, என்.எஸ்.பி. ரோடு, மலைக்கோட்டை, பெரிய கடைவீதி, தில்லை நகர், உறையூர் பகுதி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

    காய்கறி, ஜவுளி, இறைச்சி, டீ, மளிகைக்கடைகள் அனைத்தும் இன்று முழு ஊரடங்கில் பங்கேற்பதால் ஒருநாள் மட்டும் திருச்சி மாவட்டத்தில் ரூ.3 ஆயிரம் கோடிக்கு வியாபாரம் பாதிக்கப்பட்டு இருப்பதாக வணிகர்கள் தெரிவித்தனர்.

    அதேபோன்று புறநகர் பகுதியான துவாக்குடி, துறையூர், மணப்பாறை, லால்குடி போன்ற பகுதிகளில் முழுமையாக கடைகள் அடைக்கப்பட்டு சாலைகள் வெறிச்சோடி காணப்பட் டன. ஆட்டோ, கார், லாரி போன்ற எந்த வாகன போக்குவரத்தும் இல்லை.

    முழு ஊரடங்கை மீறி தேவையில்லாமல் வெளியே வரும் 4 மற்றும் இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்திருந்தனர். இதனால் கார் மற்றும் இரு சக்கர வாகன போக்குவரத்தும் காணப்படவில்லை. ஊரடங்கை தொடர்ந்து திருச்சியில் 29 இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர். மேலும் சாலை பிரிவுகள், சிக்னல் அமைந்துள்ள இடங்களிலும் போலீசார் நின்று கொண்டு கண்காணித்தனர். 

    Next Story
    ×