search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    கோவையில் புதிய உச்சமாக 889 பேருக்கு தொற்று உறுதி

    கொரோனா வேகமாக பரவி வருவதை அடுத்து பொதுமக்கள் தடுப்பூசி போட்டு கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். கோவை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 8 ஆயிரத்து 764 பேர் தடுப்பூசி போட்டு கொண்டுள்ளனர்.
    கோவை:

    கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் கொரோனா தொற்று உச்சத்தில் இருந்தது. அதன்பின்னர் படிப்படியாக கொரோனா தொற்று குறைந்து வந்தது. ஒரு நாளைக்கு 20, 30 என எண்ணிக்கை குறைந்ததால் மக்கள் சற்று நிம்மதியடைந்தனர்.

    கடந்த மார்ச் 2-வது வாரத்தில் இருந்து கோவையில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கியது. இந்த மாத தொடக்கத்தில் இருந்து பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 600-யை தொட்டது.

    அன்று முதல் ஒரு நாளைக்கு 500, 600, 700 பேர் வரை பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்றும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இந்த ஆண்டில் இதுவரை 735 பேர் பாதிக்கப்பட்டதே புதிய உச்சமாக இருந்தது. ஆனால் நேற்று ஒரே நாளில் புதிய உச்சமாக 889 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 71 ஆயிரத்து 161 ஆக உயர்ந்துள்ளது.

    கோவை இ.எஸ்.ஐ உள்பட பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்த 419 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரை 64 ஆயிரத்து 621 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது இ.எஸ்.ஐ., அரசு ஆஸ்பத்திரி, தனியார் ஆஸ்பத்திரிகளில் 5 ஆயிரத்து 830 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    கொரோனா வேகமாக பரவி வருவதை அடுத்து பொதுமக்கள் தடுப்பூசி போட்டு கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. நேற்று ஒரே நாளில் 8 ஆயிரத்து 764 பேர் தடுப்பூசி போட்டு கொண்டுள்ளனர்.

    இதுவரை மாவட்டம் முழுவதும் 3 லட்சத்து 34 ஆயிரத்து 21 பேர் தடுப்பூசியை செலுத்தி கொண்டுள்ளனர். வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

    மாவட்டம் முழுவதும் 886 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். கோவையில் ஆரம்பத்தில் கொரோனா பாதித்த வீடுகள் மட்டும் தனிமைப்படுத்தப்பட்டு வந்தன.

    தற்போது தொற்று அதிகம் உள்ள வீதிகளும் தனிமைப்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் தனிமைப்படுத்தப்பட்ட பகுதி 113 ஆக அதிகரித்துள்ளது.

    கோவை மாநகராட்சி பகுதியில் 493 வீதிகளில் 3 பேருக்கு மேல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநகராட்சி பகுதியில் மட்டும் 662 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், மாநகராட்சி பகுதியில் நாள்தோறும் சராசரியாக 4,500 பேருக்கு பரிசோதனை செய்து வருகிறோம். ஒரு வீதியில் 3 பேருக்கு மேல் பாதிப்பு இருந்தால் அந்த வீதியை தனிமைப்படுத்தி கண்காணிக்கிறோம். மாநகராட்சியில் மொத்தமுள்ள 7,569 வீதிகளில் 493 வீதிகளில் 3 பேருக்கு மேல் தொற்று உள்ளது. 1,604 வீதிகளில் 3-க்கும் குறைவாக உள்ளது. மாநகராட்சி பகுதிகளில் தொடர்ந்து தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறோம் என்றனர்.
    Next Story
    ×