search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக அரசு
    X
    தமிழக அரசு

    கொரோனா கவனிப்பு மைய எண்ணிக்கையை உயர்த்த வேண்டும்- கலெக்டர்களுக்கு தமிழக அரசு உத்தரவு

    தமிழகத்தில் கொரோனா கவனிப்பு மைய எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்களுக்கு தலைமைச்செயலாளர் ராஜீவ் ரஞ்சன் உத்தரவிட்டுள்ளார்.
    சென்னை:

    தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்கடங்காமல் உயர்ந்தபடியே உள்ளது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்காக 11 குழுக்களை அரசு அமைத்துள்ளது. இந்த குழுக்கள் என்னென்ன பணிகளை எப்படியெல்லாம் மேற்கொள்ள வேண்டும்? என்பதற்கான ஆலோசனை கூட்டம் நேற்று காலையில் தலைமைச்செயலகத்தில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் போலீஸ் டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி, சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்பட பல உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

    அந்த கூட்டம் முடிந்ததைத் தொடர்ந்து தலைமைச்செயலகத்தில் பிற்பகலில் உடனடியாக மாவட்ட கலெக்டர்களின் கூட்டத்தை தலைமைச்செயலாளர் ராஜீவ் ரஞ்சன் கூட்டினார். காணொலிக்காட்சி மூலம் இந்த கூட்டம் நடைபெற்றது. கொரோனா பரவாமல் தடுப்பதற்கு என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்? என்பதற்கான ஆலோசனைகள் மாவட்ட கலெக்டர்களுக்கு வழங்கப்பட்டன.

    தலைமைச்செயலகத்தில் நேற்று ஒரேநாளில் அடுத்தடுத்து கூட்டங்களை கூட்டி தலைமைச்செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை மேற்கொண்டார்.

    அதைத்தொடர்ந்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    அண்மை காலங்களில் கொரோனா தொற்று எண்ணிக்கை நாளொன்றுக்கு 500 பேருக்கும் கீழாக கொண்டுவரப்பட்டது. ஆனால் கடந்த 5 வாரங்களில் படிப்படியாக நோய்த் தொற்றின் அளவு உயர்ந்து, தற்போது நோய்த் தொற்று விகிதம் 10.4 சதவீதமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளுர், காஞ்சிபுரம், கோவை, திருப்பூர், திருவாரூர், திருச்சி, நாகை மாவட்டங்களில் தொற்று கூடுதலாக உள்ளது. தற்போது நாளொன்றுக்கு தொற்று 12 ஆயிரம் பேரை தாண்டியுள்ளது.

    இந்த நிலையில் தலைமை தேர்தல் அதிகாரி முன்னிலையில் மாவட்ட கலெக்டர்கள், மருத்துவ வல்லுனர்கள் மற்றும் மூத்த அரசு செயலாளர்களுடன் தலைமைச்செயலாளர் ஆலோசனை கூட்டங்கள் நடத்தி நோய் தடுப்புகான பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

    அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மொத்தம் 1,167 மெட்ரிக் டன் ஆக்சிஜன் சேமிப்பு கிடங்கு வசதியுள்ளது. தமிழ்நாட்டில் நாளொன்றுக்கு 240 டன் ஆக்சிஜன் தேவைப்படும் சூழலில், வருங்காலங்களில் இதன் தேவை அதிகரிக்கலாம் என்பதையும் கருத்தில் கொண்டு இதற்காக தனியாக ஒரு கட்டுப்பாட்டு மையத்தை தமிழ்நாடு அரசு ஏற்படுத்தியுள்ளது.

    மாவட்டங்களில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ரெம்டெசிவிர் மருந்து கிடைக்கும் ஒரே மாநிலம் தமிழ்நாடு மட்டுமே.

    தடுப்பூசி ஜனவரி 16-ந்தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழ்நாட்டில் 4,497 தடுப்பூசி மையங்களில் இத்தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. தடுப்பூசியை தவிர்க்கும் எண்ணம் மக்களிடையே இருந்தது. தடுப்பூசி வழங்கும் பணி முடிவுறும் நேரத்தில் 6 பேர் மட்டுமே மையங்களுக்கு வருவதால் அவர்களை திருப்பி அனுப்பாமல் தடுப்பூசி போடப்பட்டது.

    எனவே மீதம் 5 பேருக்கு பயன்படுத்தக் கூடிய அளவிலான மருந்துகள் வீணாயின. ஒரு குப்பி மருந்தைத் திறந்தால் அதனை கட்டாயம் 4 மணி நேரத்திற்குள் பயன்படுத்தவேண்டும். இல்லாவிட்டால் அதன் வீரியம் குறைந்துவிடும். எனவே 10 சதவீத மருந்து, கடந்த ஜனவரி முதல் மார்ச் வரை வீணாகியது. இது தடுப்பூசி திட்டத்தில் அனுமதிக்கப்பட்டதுதான்.

    1-ந்தேதி முதல் 18 வயது முடிந்த அனைவருக்கும் தடுப்பூசி வழங்க உள்ள நிலையில், கடைசி நேரத்தில் திறக்கக்கூடிய குப்பியில் உள்ள தடுப்பூசி மருந்து முழுமையாக பயன்படுத்த முடியும். இதன் மூலம் தடுப்பூசி மருந்து வீணாவது முற்றிலுமாக தவிர்க்கப்படும்.

    இந்த சூழ்நிலையில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தலைமைச்செயலாளர் ராஜீவ் ரஞ்சன் அறிவுரைகளை வழங்கியுள்ளார். அதன் விவரம்:-

    கொரோனா கவனிப்பு மையங்களை செயலாக்கத்திற்கு மாவட்ட கலெக்டர்கள் கொண்டுவர வேண்டும்.

    போர்கால அடிப்படையில் ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கை எண்ணிக்கையை சென்னை மற்றும் இதர மாவட்டங்களில் மேலும் உயர்த்த வேண்டும்.

    கொரோனா கவனிப்பு மைய எண்ணிக்கையை கடந்த ஆண்டை விட கூடுதலாக உயர்த்த வேண்டும்.

    மார்ச் 16-ந்தேதி முதல் ஏப்ரல் 21-ந்தேதி வரை 5 லட்சத்து 43 ஆயிரத்து 518 விதிமீறல்கள் கண்டறியப்பட்டு ரூ.11.50 கோடி அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×