search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    மல்லிகை பூ
    X
    மல்லிகை பூ

    மதுரை மார்க்கெட்டில் மல்லிகை கிலோ ரூ.200-க்கு விற்றதால் விவசாயிகள் கவலை

    கொரோனா ஊரடங்கு காரணமாக திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டதால் மார்க்கெட்டில் பூக்களுக்கு உரிய விலை இன்றி குறைந்த விலைக்கு விற்கப்படுவதாக வியாபாரிகள் கவலை தெரிவித்தனர்.

    மதுரை:

    தமிழகத்தில் நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    கோவில் திருவிழாக்கள் உள்ளிட்ட மதம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக மலர் சந்தைகளில் பூக்கள் விலை மிகவும் சரிந்து காணப்படுகிறது. சீசன் காலங்களில் மதுரை மல்லிகை கிலோ ரூ. 3 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுவது வழக்கம்.

    அதுபோல கனகாம்பரம் பூவுக்கும் அதிக கிராக்கி ஏற்படும். ஆனால் தற்போது சீசன் காலம் என்றாலும் கோவில் திருவிழாக்கள் கொண்டாட தடை காரணமாக பூக்களை வாங்க மக்கள் ஆர்வம் காட்டவில்லை. மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள மலர் வணிக வளாகத்திற்கு தினமும் 50 டன் மலர்கள் வருவது வழக்கம்.

    ஆனால் கொரோனா காரணத்தால் பூக்கள் வியாபாரம் மந்தம் அடைந்ததால் செடிகளை பராமரிக்க விவசாயிகள் போதிய ஆர்வம் காட்டவில்லை.

    இதன் காரணமாக தற்போது 10 டன் அளவுக்கு மலர்கள் சந்தைக்கு விற்பனைக்கு வருகிறது. ஆனாலும் போதிய விலை கிடைக்கவில்லை என்று மலர் வணிகர் சங்கத் தலைவர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

    மேலும் அவர் கூறுகையில், இன்று மதுரை மல்லிகை கிலோ 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. கனகாம்பரம் 300 ரூபாய்க்கும், முல்லை பிச்சி சம்பங்கி மலர்கள் 100 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டன.

    அரளி 50 ரூபாய்க்கும் விற்கப்பட்டது விலை மிகவும் குறைந்து விற்கப்பட்டாலும் மக்கள் வாங்க ஆர்வம் காட்டாததால் மலர் விவசாயிகளின் வாழ்வில் தொடர்ந்து மணம் வீசாத நிலையே நீடித்து வருவதாக அவர் வருத்தம் தெரிவித்தார்.

    இந்த நிலை விரைவில் மாற வேண்டும் அப்போது தான் மலர் விவசாயம் செய்யும் விவசாயிகள் நஷ்டத்தில் இருந்து தப்பிக்க முடியும் என்றும் தெரிவித்தார்.

    Next Story
    ×