search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    நாமக்கல் மண்டலத்தில் 2 நாட்களில் கறிக்கோழி விலை ரூ.24 சரிவு

    கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளாலும், இரவுநேர முழு ஊரடங்கினாலும் வெளி மாநிலங்களுக்கு கறிக்கோழி ஏற்றுமதி பாதிக்கப்பட்டு உள்ளது.

    நாமக்கல்:

    தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா 2-வது அலை பரவலை தடுக்க நேற்றிரவு முதல் இரவு நேர ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அனைத்து தொழில்களும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    தமிழகத்தில் பல்லடம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் 25 ஆயிரம் கறிக்கோழி உற்பத்தி பண்ணைகள் உள்ளன. இங்கு தினமும் 30 லட்சம் கிலோ கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்படுகிறது. கறிக்கோழிகள் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.

    கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளாலும், இரவுநேர முழு ஊரடங்கினாலும் வெளி மாநிலங்களுக்கு கறிகோழி ஏற்றுமதி பாதிக்கப்பட்டு உள்ளது. பொதுவாக கறிக்கோழி பண்ணைக் கொள்முதல் விலையை, பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு (பி.சி.சி.இ) சார்பில் தினமும் நிர்ணயம் செய்யப்படுகிறது.

    ஏற்றுமதி பாதிக்கப்பட்டு கறிக்கோழி விற்பனை படிப்படியாக சரிந்து வருவதால் அதன் விலையும் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. நாமக்கல் மண்டலத்தில் நேற்று காலை கறிக்கோழி ஒரு கிலோ 118 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

    இதற்கிடையே நேற்று பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.12 குறைக்க முடிவு செய்யப்பட்டது. இதனால் கறிக்கோழி விலை 106 ஆக சரிவடைந்தது.

    இந்த நிலையில் இன்று கறிக்கோழி விலை மேலும் 12 ரூபாய் குறைந்தது. இதையடுத்து ஒரு கிலோ கறிக்கோழி விலை 94 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது. இதனால் கறிக்கோழி விலை கடந்த 2 நாட்களில் மட்டும் கிலோவுக்கு 24 ரூபாய் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கறிக்கோழி விலை சரிவால் பண்ணையாளர்கள் கவலை அடைந்துள்ளனர். இதே போல முட்டை கொள்முதல் விலை 485 காசுகளாகவும், முட்டை கோழி விலை கிலோ 70 ஆகவும் நீடிக்கிறது.

    Next Story
    ×