search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பள்ளி நண்பர் சூசைராஜ்-உறவினர் மருதுபாண்டியன்.
    X
    பள்ளி நண்பர் சூசைராஜ்-உறவினர் மருதுபாண்டியன்.

    விவேக்குடன் பழகிய நாட்களை மறக்க முடியாது- பள்ளி நண்பர் உருக்கம்

    நடிகர் விவேக் பிறந்தது தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பெருங்கோட்டூர் கிராமத்தில் என்றாலும் வளர்ந்தது நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் தான்.

    நெல்லை:

    நடிகர் விவேக் மாரடைப்பால் இன்று அதிகாலை காலமானார். அவர் பிறந்தது தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பெருங்கோட்டூர் கிராமத்தில் என்றாலும் வளர்ந்தது நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் தான்.

    அவர் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பாளை மேரி சார்ஜென்ட் பள்ளியிலும், 6 முதல் 8 வரை கதீட்ரல் பள்ளியிலும் படித்தார். அவரது மறைவை கேள்விப்பட்ட அவருடன் படித்தவர்கள் இன்று பாளை முருகன்குறிச்சியில் அவரது உருவ படத்தை வைத்து அஞ்சலி செலுத்தினர்.

    அப்போது அவருடன் 1 முதல் 9-ம் வகுப்பு வரை பயின்ற சூசைராஜ் கூறியதாவது:-

    எனது நண்பன் விவேக் இறந்ததால் நாங்கள் மிகுந்த துக்கத்தில் உள்ளோம். அவரை போன்ற நடிகரை பார்க்க முடியாது. அவர் நெல்லைக்கு எப்போது வந்தாலும் எங்களை சந்திப்பார். நாங்கள் சென்னை சென்றால் தேவையான ஏற்பாடுகளை செய்து தருவார்.

    படிக்கும் போதே நடிகர் விவேக் குட்டி சேட்டைகள் மற்றும் நகைச்சுவையில் வல்லவர். நான் வகுப்பறையில் அமர்ந்திருக்கும் போது எனக்கு பின்னால் உள்ள இருக்கையில் விவேக் அமர்ந்திருப்பார்.

    அப்போது எனது தொடையில் கிள்ளி விட்டு ஒன்றும் தெரியாதது போல் இருந்து விடுவார். நான் என்னை கிள்ளியது அருகில் இருந்த மற்றொரு மாணவர் தான் என்று நினைத்து அவரிடம் சண்டையிடுவேன். அவருடன் பழகிய நாட்கள் மறக்க முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நடிகர் விவேக்கின் உறவினர் மருதபாண்டியன் கூறியதாவது:-

    விவேக்குடன் சாமி, காதல் சடுகுடு, அகரம் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட படங்களில் சின்ன வேடங்களில் நான் நடித்துள்ளேன். நான் சென்னையில் அரசு பஸ் டிரைவராக பணியாற்றி ஓய்வு பெற்று விட்டேன்.

    வேலை பார்த்த போதும் அவ்வப்போது சின்ன படங்களில் அவருடன் நடித்து வந்தேன். அவருடைய மறைவு எங்களுக்கு பேரிழப்பு. இறைவன் அவரை இவ்வளவு விரைவில் அழைப்பார் என்று எதிர்பார்க்கவில்லை. அவருடைய இழப்பை தாங்கி கொள்ளும் மன தைரியத்தை கடவுள் தான் எங்களுக்கு தர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×