search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓட்டலில் கவச உடையணிந்த சுகாதார பணியாளர் மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட்ட காட்சி.
    X
    ஓட்டலில் கவச உடையணிந்த சுகாதார பணியாளர் மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட்ட காட்சி.

    தனியார் நிறுவனத்தில் 23 பேருக்கு கொரோனா- நாகர்கோவிலில் பிரபல ஓட்டல் மூடப்பட்டது

    நாகர்கோவிலில் பிரபல ஓட்டலில் பணிபுரிந்து வந்த தொழிலாளி ஒருவருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதையடுத்து அந்த ஓட்டல் மூடப்பட்டது.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த 3ரங்களாக கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. பல மாதங்களுக்கு பிறகு தொற்று பரவல் வேகமெடுத்து இருப்பதால் தடுப்பு நடவடிக்கைகளில் சுகாதாரத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    கொரோனா தாக்குதலில் இருந்து தப்பிக்க முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல், கைகளை அடிக்கடி கிருமிநாசினியை பயன்படுத்தி கழுவுதல் உள்ளிட்டவைகளை தவறாமல் கடைபிடிக்குமாறு எடுத்துக்கூறி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மாவட்டத்திலேயே பாதிப்பு அதிகம் ஏற்பட்டு வரும் நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் அனைத்து இடங்களிலும் வீடுவீடாக சென்று காய்ச்சல் பரிசோதனை செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை முன்பு மேற்கொண்டதுபோல் சுகாதார பணியாளர்கள் தீவிரமாக செய்து வருகின்றனர்.

    இதனால் தினமும் கொரோனா தொற்று பாதித்தவர்கள் ஏராளமானோர் கண்டறியப்பட்டு வருகிறார்கள். தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களை உடனடியாக தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க சுகாதாரத்துறையினர் ஏற்பாடு செய்கின்றனர்.

    மேலும் தொற்று பாதித்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் தொடர்பில் இருந்தவர்கள் விவரங்களை சேகரித்து, அவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். மூன்று வாரங்களுக்கு முன்பு கொரோனா தொற்று பரவல் வேகமெடுத்த நிலையில், கடந்த ஒரு வார காலமாக தினமும் ஏராளமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    கடந்த 12-ந்தேதி ஒரே நாளில் அதிகபட்சமாக 129 பேர் தொற்று பாதிப்புக்கு உள்ளாகினர். நேற்று முன்தினம் 88 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. இந்தநிலையில் நேற்று 94 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர்.

    அதிகபட்சமாக நாகர்கோவில் பகுதியில் 28 பேர் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். அதேபோல் குருந்தன்கோட்டில் 13 பேரும், அகஸ்தீஸ்வரம் மற்றும் தக்கலையில் தலா 10 பேரும், முன்சிறையில் 6 பேரும், தோவாளை, ராஜாக்கமங்கலம் மற்றும் திருவட்டாரில் தலா 5 பேரும், கிள்ளியூர் மற்றும் மேல்புரத்தில் தலா 4 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    மேலும் நெல்லையில் இருந்து வந்த 2 பேருக்கும், கேரள மாநிலத்தில் இருந்து வந்த 2 பேருக்கும் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. நேற்று புதிதாக தொற்று பாதிப்பு கண்டறியப்பட்ட 94 பேரும் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    நேற்று புதிதாக தொற்று பாதித்தவர்களையும் சேர்த்து குமரி மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 17ஆயிரத்து 944 ஆக அதிகரித்து உள்ளது. இன்றும் ஏராளமானோருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. அவர்களும் சிகிச்சை பெற உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இந்நிலையில் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த 23 தொழிலாளர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருப்பதால் அந்த மில் மூடப்பட்டது. நாகர்கோவில் பகுதியில் உள்ள அந்த தனியார் நிறுவனத்தில் ஏராளமான வடமாநிலத்தினர் தொழிலாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.

    இந்நிலையில் அந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த வடமாநில தொழிலாளர்கள் 11 பேருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்றுபாதிப்பு கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த நிறுவன ஊழியர்கள், தொழிலாளர்கள் என மொத்தம் 150 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

    அதில் அங்கு பணிபுரிந்து வந்த மேலும் 12 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த ஊழியர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    அந்த நிறுவனத்தில் மொத்தம் 23 ஊழியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். 23 பேர் பாதிக்கப்பட்டதால் அந்த நிறுவனம் மூடப்பட்டது. மேலும் அந்த நிறுவனம் முழுவதும் கிருமி நாசினி தெளித்தல், பிளீச்சிங் பவுடர் தூவுதல் உள்ளிட்ட பணிகளை சுகாதார பணியாளர்கள் மேற்கொண்டனர்.

    இதேபோல் நாகர்கோவில் செட்டிகுளம் பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல ஓட்டலில் பணிபுரிந்து வந்த ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளி ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இதையடுத்து அந்த நபர் பணிபுரிந்த ஓட்டல் மூடப்பட்டது.

    அங்கிருந்த மேஜைகள் மற்றும் இருக்கைகள் உள்ளிட்ட பொருட்களின் மீது மாநகராட்சியின் தூய்மை பணியாளர்கள் கிருமிநாசினி தெளித்தனர். மேலும் ஓட்டலின் அனைத்து பகுதிகளிலும் சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த ஓட்டலில் பணிபுரியும் மற்ற தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    அந்த ஓட்டலுக்கு நாகர்கோவிலில் பல்வேறு கிளைகள் உள்ளன. இதனால் அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் மருத்துவ பரிசோதனை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



    Next Story
    ×