search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிறுமுகை வனப்பகுதியில் இறந்து கிடந்த 3 வயது பெண் குட்டி யானை.
    X
    சிறுமுகை வனப்பகுதியில் இறந்து கிடந்த 3 வயது பெண் குட்டி யானை.

    சிறுமுகை வனப்பகுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்த குட்டியானை

    சிறுமுகை வனப்பகுதியில் சுமார் 3 வயது மதிக்கத்தக்க பெண் யானை உயிரிழந்ததையடுத்து, யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்யும் பணியை டாக்டர்கள் தொடங்கினர்.
    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த சிறுமுகை வனச்சரகத்தில் யானை, மான், சிறுத்தை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. வனவிலங்குகள் நடமாட்டம் மற்றும் காட்டில் ஏதாவது அசம்பாவித சம்பவங்கள் நடக்கிறதா? என்பதை கண்காணிக்க வனத்துறையினர் தினமும் ரோந்து செல்வது வழக்கம்.

    நேற்று மாலை வன காப்பாளர், வனகாவலர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் சிறுமுகை வனசரகத்திற்கு உட்பட்ட, உளியூர் பீட், பெத்திகுட்டை பிரிவு, சிறுமுகை சரக வரம்பில் உள்ள சோழ மாதேவி சரகப் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த பகுதியில் குட்டி யானை ஒன்று இறந்து கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சியான அவர்கள் உடனடியாக சம்பவம் குறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

    தகவல் அறிந்ததும் சிறுமுகை வனசரக அலுவலர் செந்தில்குமார் மற்றும் கால்நடை மருத்துவ அலுவலர்கள் உள்பட வனத்துறையினர் இன்று காலை யானை இறந்து கிடந்த இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். ஏதாவது காயங்கள் உள்ளதா? என யானையின் உடலை பார்த்தனர். ஆனால் எந்தவித காயங்களுமே இல்லை. இதையடுத்து யானையை பிரேத பரிசோதனை செய்யும் பணியை டாக்டர்கள் தொடங்கினர்.

    இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், வனப்பகுதியில் இறந்து கிடந்த யானை சுமார் 3 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஆகும். யானை எப்படி இறந்தது என்பது தெரியவில்லை.

    மற்ற யானைகளுடன் ஏற்பட்ட மோதலில் இறந்திருந்தால் உடலில் ஏதாவது காயங்கள் இருக்கும். ஆனால் இந்த யானையின் உடலில் எந்தவித காயமும் இல்லை. எனவே யானை வேறு ஏதாவது தொற்றின் காரணமாக இறந்ததா? என்பது தெரியவில்லை. பிரேத பரிசோதனை முடிந்த பின்னரே யானை இறந்ததற்கான காரணம் தெரியவரும் என்றனர்.



    Next Story
    ×