search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேலம் அஸ்தம்பட்டி சாலையில் வியாபாரி ஒருவர் விற்பனைக்காக குவித்து வைத்துள்ள மாம்பழங்கள்.
    X
    சேலம் அஸ்தம்பட்டி சாலையில் வியாபாரி ஒருவர் விற்பனைக்காக குவித்து வைத்துள்ள மாம்பழங்கள்.

    சேலத்தில் மாம்பழ விற்பனை மீண்டும் முடங்கும் அபாயம்

    மாம்பழ சீசன் தொடங்கியதால் சேலம் மார்க்கெட்டுக்கு கடந்த வாரத்தை காட்டிலும் தற்போது அதிக அளவில் மாம்பழங்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.
    சேலம்:

    சேலம் என்றாலே அனைவரின் நினைவுக்கு முதலில் வருவது தித்திக்கும் மாம்பழம் தான். சேலம் மாம்பழம் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. ஆண்டுதோறும் ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் சேலத்தில் மாம்பழ சீசன் தொடங்கும்.

    அதன்படி சேலம் மாவட்டத்தில் தற்போது மாம்பழ சீசன் தொடங்கி உள்ளது. சேலம் மார்க்கெட்டிற்கு சங்ககிரி, ஆத்தூர், வனவாசி, மேச்சேரி, நங்கவள்ளி, தலைவாசல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்தும் தினமும் பல வகையான மாம்பழங்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.

    தற்போது மாம்பழ சீசன் தொடங்கியுள்ளதால் கடந்த வாரத்தை காட்டிலும் தற்போது மாம்பழங்கள் வரத்து அதிகரித்துள்ளது. அதாவது, சேலம் பெங்களூரா, மல்கோவா, இமாம்பசந்த், குண்டு, நடுசாலை, பங்கனப்பள்ளி, செந்தூரா உள்பட பல்வேறு ரக மாம்பழங்கள் சேலம் மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. இதனை சேலம் மற்றும் அண்டை மாவட்டங்களை சேர்ந்தவர்கள் வாங்கி செல்கிறார்கள். மேலும் சேலத்தில் இருந்து வெளியூர்களுக்கு மாம்பழங்கள் அனுப்பி வைக்கும் பணியும் நடந்து வருகிறது.

    சேலம் வ.உ.சி. மார்க்கெட், கடை வீதி, செவ்வாய்ப்பேட்டை, அம்மாபேட்டை, அஸ்தம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரம் வியாபாரிகள் மாம்பழங்களை வைத்து விற்பனை செய்து வருகிறார்கள். தள்ளுவண்டிகளிலும் வியாபாரம் களை கட்டி உள்ளது. இதனை பொதுமக்கள் ஆர்வமாக வீடுகளுக்கு வாங்கி செல்வதை காணமுடிகிறது.

    இதுகுறித்து சேலம் மாம்பழ வியாபாரி ஒருவர் கூறியதாவது:-

    மாம்பழ சீசன் தொடங்கியதால் சேலம் மார்க்கெட்டுக்கு கடந்த வாரத்தை காட்டிலும் தற்போது அதிக அளவில் மாம்பழங்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. சேலத்தில் இருந்து சென்னை, திருச்சி, நெல்லை, மதுரை, கோவை உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு மாம்பழம் அனுப்பி வைக்கப்படுகின்றன.

    மேலும், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. இனிவரும் 15 நாட்களில் மாம்பழங்களின் வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. தற்போது சேலம் மார்க்கெட்களில் ஒரு கிலோ மாம்பழம் ரூ.100 முதல் 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

    இதற்கிடையே தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவுவதால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதில் திருவிழாக்கள், சந்தைகளுக்கு கடந்த ஆண்டை போல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டு இதே நேரத்தில் கொரோனா ஊரடங்கால் மா மரங்களில் மகசூல் அதிகமாக இருந்தும், அதை உரிய விலைக்கு விற்க முடியாமல் போனது. இதனால் விவசாயிகளுக்கு வருவாய் குறைந்தது.

    இந்த ஆண்டு சீசனிலாவது போதிய வருவாய் பெறலாம் என வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் காத்திருந்தனர். ஆனால் தற்போதும் சீசன் நேரத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளோம்.

    இவ்வாறு மாம்பழ வியாபாரி கூறினார்.

    Next Story
    ×