search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோயம்பேடு மார்க்கெட்
    X
    கோயம்பேடு மார்க்கெட்

    கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விற்பனை மந்தம்- வியாபாரிகள் கவலை

    மார்க்கெட் வளாகத்துக்குள் வரும் அனைத்து வாகனங்களும் கிருமிநாசினி தெளிக்கப்பட்ட பின்பே அனுமதிக்கப்படுகிறது.
    சென்னை:

    கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. முககவசம் அணியாதவர்கள் மார்க்கெட் வளாகத்துக்குள் அனுமதிக்கப்படுவது கிடையாது. மார்க்கெட் வளாகத்துக்குள் வரும் அனைத்து வாகனங்களும் கிருமிநாசினி தெளிக்கப்பட்ட பின்பே அனுமதிக்கப்படுகிறது. தினந்தோறும் இரவு 7 மணியில் இருந்து மறுநாள் பகல் 12 மணி வரையில் மார்க்கெட் செயல்படுகிறது.

    இந்தநிலையில் கொரோனா அச்சம் காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டுக்கு பொதுமக்கள் வரத்து வெகுவாக குறைந்திருக்கிறது. சிறு மற்றும் மொத்த வியாபாரிகள் மட்டுமே மார்க்கெட் வளாகத்துக்குள் சென்று வருகிறார்கள்.விலையில் மாற்றம் இல்லாதபோதும், பொதுமக்கள் வரத்து குறைந்ததால் காய்கறி விற்பனை மந்தமாகவே இருப்பதாக வியாபாரிகள் கவலை தெரிவிக்கிறார்கள். இதுகுறித்து கோயம்பேடு மார்க்கெட் காய்கறி வியாபாரிகள் சங்க தலைவர் அப்துல்காதர் கூறியதாவது:-

    கொரோனா பயம் காரணமாக மக்கள் பொது இடங்களுக்கு செல்வதை ஓரளவு தவிர்த்து வருகிறார்கள். அந்தவகையில் கோயம்பேடு மார்க்கெட்டுக்கும் மக்கள் வருவதை தவிர்த்து வருகிறார்கள். இதனால் பரபரப்பாக இருக்கும் கோயம்பேடு மார்க்கெட் தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது. மக்கள் வராததால் பெரியளவில் வியாபாரமும் இல்லை. இதனால் வியாபாரம் மந்தமாகி உள்ளது. எப்போது இந்த கொரோனா பயம் முழுவதுமாக நீங்கி, முன்புபோல வியாபாரம் நடக்கும்? என்ற பெரிய எதிர்பார்ப்பிலேயே எங்கள் வாழ்க்கையை நடத்தி வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×