
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அருகே உள்ள பாளையஞ்செட்டிகுளத்தைச் சேர்ந்தவர் பவுல் பெல்சிங். இவரது மனைவி ஆலங்குளத்தைச் சேர்ந்த ஈஸ்டர் சொர்ணம். இவர்கள் தற்போது தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் வசித்து வருகின்றனர். தம்பதியின் 2-வது மகள் ஐடா (வயது 7). இங்குள்ள தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தாள்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஐடாவுக்கு காய்ச்சல் வந்துள்ளது. இதனால் அங்குள்ள தனியார் பரிசோதனை மையத்திற்கு சென்று ஊசி போட்டுள்ளனர். அதில் அலர்ஜி ஏற்பட்டு சிறுமியின் உடலில் கொப்பளங்கள் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து பெற்றோர் தனது மகளை நெல்லையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள், பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளனர்.
அங்கு நேற்று முன்தினம் இரவு கொண்டு செல்லும் வழியிலேயே சிறுமி ஐடா பரிதாபமாக உயிரிழந்தாள். இதுகுறித்து ஈஸ்டர் சொர்ணம் அளித்த புகாரின் பேரில் ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மர்ம காய்ச்சலுக்கு சிறுமி இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.