search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நூல்
    X
    நூல்

    நூல் விலை மேலும் உயர்வால் திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்கள் பாதிப்பு

    நூல் விலை உயர்வை கண்டித்து மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மீண்டும் போராட்டம் நடத்த திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.
    திருப்பூர்:

    தமிழக நூற்பாலைகள் கடந்த 7 மாதங்களாக, பின்னலாடை உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் ஒசைரி நூல் விலையை தொடர்ந்து உயர்த்தி வருகின்றன. இதனால் பாதிப்புகளை சந்தித்து வரும், திருப்பூர் பின்னலாடை துறையினர் நூல் விலையை குறைக்க வலியுறுத்தி, மார்ச் 15-ந்தேதி உற்பத்தி நிறுத்த போராட்டம் நடத்தினர்.

    கோவை தென்னிந்திய நூற்பாலைகள் சங்கமும்(சைமா), நூல் விலையை சீராக வைத்திருக்க கோரி, நூற்பாலைகளுக்கு கடிதம் அனுப்பியது. ஒவ்வொரு மாதமும் 1-ந்தேதி, நூல் விலை பட்டியல் வெளியிடப்படும். வழக்கத்துக்கு மாறாக கடந்த 1-ந்தேதி விலை பட்டியலை நூற்பாலைகள் வெளியிடவில்லை.

    தற்போது சில நூற்பாலைகள், நூல் விலையை உயர்த்தி அதிர்ச்சி கொடுத்துள்ளன. பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் அதிகம் பயன்படுத்தும் 10 , 34ம் நம்பர் நூல் கிலோவுக்கு ரூ.20 உயர்த்தப்பட்டுள்ளது. 40ம் நம்பர் ரூ.30,ரூ.50, 60ம் நம்பர் ரூ.40 உயர்த்தப்பட்டுள்ளது.

    கொள்முதல் செய்யும் ஆடை உற்பத்தி நிறுவனங்களுக்கு மட்டும், வாய் மொழியாக, விலை உயர்வு தெரிவிக்கப்படுகிறது என திருப்பூர் பின்னலாடை துறையினர் தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம் கூறுகையில், ‘கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு, பருத்தி பஞ்சு மற்றும் நூல் ஏற்றுமதி குறைவாகவே உள்ளது. திருப்பூர் உட்பட நாட்டில் உள்ள ஆயத்த ஆடை மற்றும் வீட்டு உபயோக ஜவுளி உற்பத்தி நிறுவனங்களுக்கு அதிகளவு ஆர்டர் கிடைத்துள்ளது. நூல் தேவை அதிகரித்துள்ள போதும், நூல் உற்பத்தி 80 சதவீத அளவிலேயே நடக்கிறது. தட்டுப்பாடு அதிகரிப்பாலேயே, நூல் விலை உயர்ந்து வருகிறது. செயற்கையான நூல் விலை ஏற்றம் கூடாது. இதே நிலை தொடர்ந்தால், பின்னலாடை தொழில் கை நழுவிப்போய்விடும் என்றார்.

    திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்க(டீமா) தலைவர் முத்து ரத்தினம் கூறுகையில், ‘பஞ்சு விலை சீராக உள்ள போதும், நூல் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. பெரிய, சிறிய நூற்பாலைகள், போட்டி போட்டு விலை உயர்த்துகின்றன. இதுவரை, கிலோவுக்கு ரூ.92 உயர்ந்துள்ளது. நூல் விலை உயர்வை கண்டித்து, திருப்பூர், கரூர், ஈரோடு உட்பட தமிழக ஆடை உற்பத்தி துறையினரை ஒருங்கிணைத்து, மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மீண்டும் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றனர்.
    Next Story
    ×