search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் யானை ஜெயமால்யதா
    X
    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் யானை ஜெயமால்யதா

    தேக்கம்பட்டி முகாமில் தாக்கப்பட்ட ஜெயமால்யதா யானை கோவிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது

    ஜெயமால்யதா யானை பாகன்களை கண்டதும் மகிழ்ச்சியால் துள்ளி ஆரவாரம் செய்தது. பாகன்கள் யானையின் துதிக்கையை கட்டித்தழுவி ஆனந்த கண்ணீர் வடித்த காட்சி உருக்கமாக இருந்தது.
    மேட்டுப்பாளையம்:

    கோவை மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி பவானி ஆற்றுப்படுகையில் தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் கடந்த மாதம் 8-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. முகாமில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள கோவில்கள் மற்றும் மடங்களை சேர்ந்த 26 யானைகள் கலந்துகொண்டு புத்துணர்வு பெற்று வருகின்றன.

    முகாமில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு சொந்தமான ஜெயமால்யதா யானையும் கலந்து கொண்டது. கடந்த மாதம் 20-ந் தேதி யானை ஜெயமால்யதாவை பாகன் ராஜா என்கிற வினில்குமார் உதவி பாகன் சிவ பிரசாத் ஆகியோர் பிரம்பால் கொடூரமாக தாக்கிய வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது.

    இதனையடுத்து பாகன் சஸ்பெண்டு செய்யப்பட்டார். யானையை தாக்கிய 2 பாகன்கள் கைது செய்யப்பட்டனர். தாக்கப்பட்ட யானையை சுப்பிரமணி என்ற பாகன் கூடுதலாக பராமரித்து வந்தார்.

    பாகன்களை பிரிந்த யானை சோகத்தில் உணவு சாப்பிடாமல் இருந்தது. நடைபயிற்சிக்கும் செல்லாமல் கட்டியே வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் யானையை தாக்கிய வழக்கில் மேட்டுப்பாளையம் கோர்ட்டு 2 பாகன்களுக்கும் ஜாமீன் வழங்கியது. அவர்கள் சொந்த ஊருக்கு திரும்பிச்சென்றனர்.

    கடந்த 22-ந்தேதி மருத்துவ குழுவினர் யானை ஜெயமால்யதாவை சோதனை செய்தனர்.

    அப்போது தற்காலிக பாகனை கொண்டு பராமரிப்பது ஆபத்தானது. யானையின் பாகன்கள் இல்லாததால் யானையின் குணாதிசயங்கள் மாற வாய்ப்புள்ளது. முகாமில் உள்ள மற்ற யானைகள் முகாமில் உள்ள அலுவலர்களுக்கும் பாதுகாப்பானது இல்லை என கருத்து தெரிவித்தனர்.

    யானை தாக்கப்பட்ட 21-ந்தேதி முதல் நேற்று வரை கட்டியே வைக்கப்பட்டிருந்தது. நடைபயிற்சி, ‌ஷவர் குளியல் என்று எந்த புத்துணர்வும் அளிக்க முடியவில்லை. இதனையடுத்து யானையை கோவிலுக்கு அனுப்பி வைக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். இது குறித்து கோவில் நிர்வாகத்துக்கு தெரிவிக்கப்பட்டது.

    இதனை ஏற்ற கோவில் நிர்வாகம் யானையை தாக்கிய அதே பாகன்களான பாகன் ராஜா என்கிற வினில்குமார், பாகன் சிவபிரசாத் ஆகியோரை லாரியில் அனுப்பி வைத்தது.

    அதன்படி இன்று அதிகாலை 2.30 மணிக்கு தேக்கம்பட்டி முகாமுக்கு வந்தனர். பாகன்களை கண்டதும் யானை மகிழ்ச்சியால் துள்ளி ஆரவாரம் செய்தது. பாகன்கள் யானையின் துதிக்கையை கட்டித்தழுவி ஆனந்த கண்ணீர் வடித்தனர். இந்த காட்சி உருக்கமாக இருந்தது.

    பின்னர் ஜெயமால்யதா யானையை அதே பாகன்கள் குளிக்க வைத்தனர். உணவு, பசுந்தீவனம், ஊட்டச்சத்து வழங்கப்பட்டன. பின்னர் லாரியில் ஜெயமால்யதா யானை ஏற்றப்பட்டது.

    இதைப்பார்த்த அங்கிருந்த மற்ற யானைகள் அங்குமிங்கும் நகர்ந்து பிளிறின. பாகன்களும் சோகமாக இருந்தனர்.

    பின்னர் யானையை ஏற்றிய லாரி கோவிலுக்கு புறப்பட்டு சென்றது.

    இந்த யானை அருகே புதுவை மணக்குளவிநாயகர் கோவில் யானை லட்சுமி கட்டி வைக்கப்பட்டிருந்தது. யானையின் பிரிவால் லட்சுமி மிகுந்த சோகத்தில் இருந்தது. 13 ஆண்டு கால புத்துணர்வு முகாமில் யானையை திருப்பி அனுப்பி வைப்பது இதுவே முதல் முறையாகும். மீதமுள்ள 25 யானைகளும் இன்று காலை தொடர்ந்து வழக்கம்போல் நடைபயிற்சி சென்றன.


    Next Story
    ×