search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முத்தரசன்
    X
    முத்தரசன்

    சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தி.மு.க. ஆட்சி அமைக்கும்- முத்தரசன் பேட்டி

    வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தி.மு.க. ஆட்சி அமைக்கும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.
    திருப்பூர்:

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் திருப்பூரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பா.ஜனதா கட்சி அல்லாத கட்சிகள் ஆட்சி நடத்துகிற மாநிலங்களில் எம்.எல்.ஏ.க்களை விலை கொடுத்து வாங்குவது அல்லது வருமான வரித்துறை போன்றவற்றுடன் தனது அதிகாரத்தை பயன்படுத்தி மிரட்டி ஜனநாயக விரோத செயல்களில் மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை துணை நிலை கவர்னர் மூலமாக அரசை செயல்படுத்த முடியாமல் ஒரு போட்டி அரசை நடத்தி தற்போது தி.மு.க., காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை விலை கொடுத்து வாங்கி அங்கு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தி இருப்பது அப்பட்டமான ஜனநாயக விரோத செயல். இதை இந்திய கம்யூனிஸ்டு கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

    தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி அரசு என்பது மத்திய அரசின் பினாமி அரசாக உள்ளது. அ.தி.மு.க. அரசின் தோளின் மீது சவாரி செய்யும் அநாகரிக போக்கு தொடர்ந்து வருகிறது. சட்டமன்ற தேர்தல் விரைவில் வர உள்ளது. தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் வெளியிடப்பட்டது. அடுத்த அரசு அமைவதற்குள் இடைப்பட்ட காலத்துக்குள் அரசு நிர்வாகம் செயல்படுவதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். இதில் புதிய அறிவிப்புகளை வெளியிட கூடாது. ஆனால் அ.தி.மு.க. அரசு முழு பட்ஜெட் போல் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

    ரூ.5 லட்சத்து 70 ஆயிரம் கோடி கடன் தமிழக மக்கள் மீது சுமத்தியுள்ளனர். ரூ.41 ஆயிரம் கோடி பற்றாக்குறை பட்ஜெட்டை சமர்ப்பித்து விட்டு இந்த அரசு விடைபெற போகிறது. எதிர்காலத்தில் இவர்கள் ஆட்சி அமைக்கப்போதில்லை என்று அவர்களுக்கே தெரியும்.

    திருப்பூரில் நூல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து உள்ளது. இதன்காரணமாக பனியன் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தொழில் முதலீட்டாளர்கள் மட்டுமில்லாமல் லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு பாதிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டில் தேவை போக மீதம் உள்ள நூலை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும். ஆனால் அரசு உள்நாட்டு தொழிலை பற்றி கவலைப்படாமல் வெளிநாடுகளுக்கு நூலை ஏற்றுமதி செய்வதால் இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

    மத்திய அரசு, மாநில அரசு இந்த பிரச்சினையில் கவனம் செலுத்தி அரசே நூலை கொள்முதல் செய்து நியாயமான முறையில் நூலை கொடுத்து பனியன் தொழிலை பாதுகாப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    தமிழ்நாடு போக்குவரத்து தொழிலாளர்கள் நாளை (இன்று) அனைத்து தொழிற்சங்கத்தினர் காலவரையற்ற வேலைநிறத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர். இந்த வேலைநிறுத்தம் தொடங்கினால் மிகப்பெரிய அளவில் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே அரசு உடனடியாக தலையிட்டு அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி நியாயமான முறையில் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.

    வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தி.மு.க. ஆட்சி அமைக்கும். அதில் எந்த சந்தேகம் இல்லை. எதிர்வரும் அரசு அனைத்தையும் திறமையாக எதிர்கொண்டு சமாளிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×