search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திமுக
    X
    திமுக

    தி.மு.க. விருப்ப மனு எண்ணிக்கை 6 ஆயிரத்தை கடந்தது

    தி.மு.க.வில் வினியோகிக்கப்பட்ட விருப்ப மனு எண்ணிக்கை 6 ஆயிரத்தை கடந்தது. 8-வது நாளான நேற்று துரைமுருகன், கே.என்.நேரு உள்பட முக்கிய நிர்வாகிகள் மனு தாக்கல் செய்தனர்.
    சென்னை:

    சட்டமன்ற தேர்தலையொட்டி, தி.மு.க. சார்பில் வேட்பாளர்கள் விருப்ப மனு வினியோகம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கடந்த 17-ந் தேதி தொடங்கியது. ஒவ்வொரு நாளும் தி.மு.க. நிர்வாகிகள் ஆர்வத்துடன் விருப்ப மனு வாங்கி தாக்கல் செய்து வருகின்றனர். குறிப்பாக கொளத்தூரில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினும் போட்டியிட கட்சி நிர்வாகிகள் பலர் மனு தாக்கல் செய்து வருகின்றனர்.

    இந்தநிலையில் சுபமுகூர்த்த தினமான நேற்று (8-வது நாள்) விருப்ப மனு வாங்கவும், அதனை தாக்கல் செய்யவும் தி.மு.க.வினர் ஆர்வம் காட்டினர். இதனால் அண்ணா அறிவாலய வளாகமே தி.மு.க. கட்சியினரால் நிறைந்திருந்தது. மனு தாக்கல் செய்யும் இடத்தில் நிற்கமுடியாத அளவுக்கு கூட்டம் காணப்பட்டது.

    தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் காட்பாடி தொகுதியில் போட்டியிட மனு தாக்கல் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மக்கள் தி.மு.க.வுக்கு வாக்களிக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டார்கள். மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக வரவேண்டும் என்ற எண்ணம் தமிழகம் முழுவதும் பரவி வருகிறது. சாதகமாக வந்தாலும் சரி, பாதகமாக வந்தாலும் சரி, ஒருபோதும் கருத்துக்கணிப்பை நான் நம்பியது கிடையாது. தேர்தல் களம் தி.மு.க.வுக்கு சாதகமாக உள்ளது. 234 தொகுதிகளிலும் நிச்சயம் வெற்றி பெறுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தி.மு.க. முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு திருச்சி மேற்கு தொகுதிக்கும், அவரது மகன் அருண் நேரு லால்குடி தொகுதிக்கும், முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு திருவண்ணாமலை தொகுதிக்கும், முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு திருச்சுழி தொகுதிக்கும், முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் திருப்பத்தூர் தொகுதிக்கும், மாநில இளைஞரணி துணைச்செயலாளர் வக்கீல் எஸ்.ஜோயல் தூத்துக்குடி மற்றும் ஸ்ரீவைகுண்டம் தொகுதிகளுக்கும், முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் அம்பாசமுத்திரம் தொகுதிக்கும், மாவட்டப் பொறுப்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருவெறும்பூர் தொகுதிக்கும், பொருளாளர் டி.ஆர்.பாலுவின் மகன் டி.ஆர்.பி.ராஜா மன்னார்குடி தொகுதிக்கும், பிரசாரக்குழு செயலாளர்  சிம்லா முத்துச்சோழன் ஆர்.கே.நகர் தொகுதிக்கும், கவிஞர் சல்மா மணப்பாறை தொகுதிக்கும் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தனர். இதுபோல நிர்வாகிகள் ஏராளமானோர் விருப்ப மனு தாக்கல் செய்தனர்.
    Next Story
    ×