search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கே.என்.நேரு
    X
    கே.என்.நேரு

    கமல்ஹாசன் கட்சியுடன் தி.மு.க. கூட்டணியா?- முதன்மை செயலாளர் கே.என்.நேரு பேட்டி

    தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசன் கட்சியுடன் தி.மு.க. கூட்டணி அமைக்குமா? என்பதற்கு முதன்மை செயலாளர் கே.என்.நேரு பதில் அளித்தார்.
    திருச்சி:

    திருச்சியில் கே.என்.நேரு நிருபர்களிடம் கூறியதாவது:-

    காவிரி-குண்டாறு இணைப்பு திட்டம் என்பது தி.மு.க. ஆட்சி காலத்தில் கருணாநிதியால் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தின் ஆரம்ப கட்டத்தில் கரூர் மாவட்டம் மாயனூரில் தி.மு.க. ஆட்சியில் தடுப்பணை கட்டப்பட்டது. அதைத்தொடர்ந்து நிலம் கையகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டபோது ஆட்சி முடிந்து விட்டது. தி.மு.க. ஆட்சியில் மொத்த திட்டத்திற்கும் ரூ.600 கோடிக்குள் தான் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டது.

    ஆனால், தற்போது ஒரு வாய்க்காலுக்கு மட்டுமே ரூ.691 கோடி நிதி ஒதுக்குவதாக சொல்கிறார்கள். காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு வாய்க்கால் வெட்டுவதை தொடக்கத்தில் இருந்தோ அல்லது கடைகோடியில் இருந்தோதான் தொடங்கப்பட வேண்டும். ஆனால், இத்திட்டத்தை ஆட்சியாளர்கள் நடுப்பகுதியில் இருந்து தொடங்கி இருக்கிறார்கள் என குற்றஞ்சாட்டுகிறேன்.

    கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை என்று நான் சொல்லவில்லை. எந்த கூட்டணியில் யாரை இணைக்க வேண்டும். யார் வேண்டாம் என்று முடிவு செய்கிற இடத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தான் உள்ளார். கமலுடன் கூட்டணிக்கு யார் தூது விட்டார்கள்? என்பதும் எனக்கு தெரியாது.

    டாஸ்மாக் மதுக்கடையை மூடுவேன் என ஸ்டாலின் ஏன்? சொல்லாமல் உள்ளார் என கமல்ஹாசன் கூறுவதாக கேட்கிறீர்கள். நான், பிரதமரை பற்றி ஏதாவது பேசமுடியுமா?. டாஸ்மாக் மதுக்கடை உள்ளிட்ட அனைத்தையும் மூடுவதாக கமல்ஹாசனை சொல்ல சொல்லுங்கள் பார்ப்போம்.

    தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி வந்தபோதுதான் திருச்சி வளர்ச்சி அடைந்துள்ளது. எந்த ஒருகாலத்திலும் முதல்-அமைச்சர் பதவியை அ.தி.மு.க.விடம் இருந்து ஸ்டாலின் தட்டி பறிக்க முடியாது என்று சொல்கிற ஓ.பன்னீர்செல்வம், தன்னிடம் இருந்து முதல்-அமைச்சர் பதவி போகாது என்றார். அவரது கண்முன்னே முதல்-அமைச்சர் பதவி தட்டி பறிக்கப்பட்டது.

    தமிழகத்திற்கு பிரதமர் மோடி வந்து சென்ற பின்னரே, தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம். தி.மு.க. தேர்தல் அறிக்கை தயார் செய்ய தனிக்குழு செயல்பட்டு வருகிறது. அதுபோல தேர்தல் கூட்டணி பேசுவதற்காகவும் தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகிறது. தகுந்த நேரத்தில் அறிவிப்புகள் வெளியாகும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.
    Next Story
    ×