search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அங்கன்வாடி பெண் ஊழியர்கள் இரவில் அங்கேயே படுத்து உறங்கிய காட்சி.
    X
    அங்கன்வாடி பெண் ஊழியர்கள் இரவில் அங்கேயே படுத்து உறங்கிய காட்சி.

    திருப்பூரில் அங்கன்வாடி ஊழியர்கள் விடிய, விடிய காத்திருப்பு போராட்டம்

    திருப்பூரில் அங்கன்வாடி ஊழியர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். காலையில் தொடங்கிய போராட்டம் இன்று 2-வது நாளாக தொடர்ந்தது.
    திருப்பூர்:

    அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு முறையான காலமுறை ஊதியம் வழங்கி அரசு ஊழியராக்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் சாலை மறியல் உள்பட பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர்.

    அதன் ஒருபகுதியாக நேற்று காலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். மாநில துணை தலைவர் பாக்கியம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் எல்லம்மாள், பொருளாளர் பேபி முன்னிலை வகித்தனர்.

    அப்போது அகவிலைப்படியுடன் கூடிய முறையான ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும், பல ஆண்டுகளாக பணிபுரியும் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களை பணி நிரந்தரம் செய்து அரசு ஊழியராக்கி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்று கண்டன கோ‌ஷங்களை எழுப்பியவாறு கலெக்டர் அலுவலகத்துக்குள் நுழைய முயன்றனர். அவர்களை அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர்.

    இதையடுத்து அங்கன்வாடி ஊழியர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். காலையில் தொடங்கிய போராட்டம் இன்று 2-வது நாளாக தொடர்ந்தது.

    நேற்று இரவு ஊழியர்கள் அனைவரும் சாலையிலேயே சமைத்து சாப்பிட்டு அங்கேயே படுத்து தூங்கினர். இன்று காலை தொடர்ந்து தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    போராட்டத்தை முன்னிட்டு எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெற்று விடக்கூடாது என்பதற்காக அந்த பகுதியில் பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். போராட்டத்தில் உடுமலை, பல்லடம், காங்கயம், வெள்ளகோவில், தாராபுரம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான அங்கன்வாடி ஊழியர்கள் பங்கேற்றனர்.

    இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:-

    கடந்த 2016-ம் ஆண்டு சட்டமன்ற கூட்டத்தொடரின் போது 110 விதியின் கீழ் அங்கன்வாடி ஊழியர்களை 7-வது ஊதியக்குழுவில் அரசு ஊழியர் ஆக்குவேன் என அப்போதைய முதல்- அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். ஆனால் அதனை இதுவரை அரசு நிறைவேற்றவில்லை. நாங்கள் கொரோனா பாதிப்புக்கு மத்தியில் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் பிறந்த குழந்தை முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு எடை எடுத்தல், வீடுகளுக்கு சென்று சத்துமாவு கொடுத்தல், தடுப்பூசி போட வைத்தல் பணிகளை செய்து வந்துள்ளோம்.

    எனவே எங்களது கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    Next Story
    ×