search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
    X
    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

    கால்நடை பூங்கா, கால்நடை மருத்துவ கல்லூரி ஆராய்ச்சி மையம்- முதலமைச்சர் திறந்து வைத்தார்

    சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே ரூ. 1000 கோடி செலவில் கட்டப்பட்ட ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சி மையத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
    சேலம்:

    சேலம் மாவட்டம் தலைவாசல் வீ கூட்ரோடு பகுதியில் ரூ. 1000 கோடி செலவில் 1500 ஏக்கர் பரப்பளவில் ஆசியாவிலேயே மிகப்பெரிய அளவில் கால்நடை பூங்கா மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சி மையம் கட்டப்பட்டு உள்ளது. அதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது.

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று கால்நடை பூங்கா மற்றும் ஆராய்ச்சி மைய கட்டிடத்தை திறந்து வைத்தார். பின்னர் அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். இந்த விழாவிற்கு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன் தலைமை தாங்கினார்.

    இதில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், கலெக்டர் ராமன், எம்.எல்.ஏ.க்கள் வெங்கடாஜலம், செம்மலை, வெற்றிவேல், ராஜா, மனோன்மணி, சின்னதம்பி, மருதமுத்து, சித்ரா, சக்திவேல் மற்றும் கட்சி நிர்வாகிகள் அரசு அதிகாரிகள் உள்பட பலர் பங்கேற்றனர். இதையொட்டி 1000-த்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    தலைவாசல் கால்நடை பூங்கா அமைப்பது குறித்து சட்டப்பேரவையில் கடந்த 2019 -ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 13-ந்தேதி பட்ஜெட் மீதான விவாதத்தின்போது, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 110-வது விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்டார். இதை தொடர்ந்து கடந்த ஆண்டு பிப்ரவரி 9-ந்தேதி இந்த திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார்.

    கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய கட்டிடம் கட்டும் பணியில், நிர்வாக அலுவலகக் கட்டிடம், கல்வி சார் வளாகங்கள் 8, நூலகம், மாணவ, மாணவியர் விடுதி, இறைச்சி அறிவியல், பால் அறிவியல், கால்நடைப் பண்ணை வளாகம், முதல்வர் குடியிருப்பு என 20 வகையான கட்டிடங்கள் மொத்தம் 3,72,473 சதுர அடி பரப்பில் கட்டப்பட்டு உள்ளன.

    இந்த பூங்கா 3 பிரிவுகளாக அமைகிறது. முதலாவது பிரிவில் நவீன வசதிகளைக் கொண்ட கால்நடை மருத்துவமனை, நவீன பண்ணை முறைகளை விவசாயிகளுக்கு எடுத்துக்காட்டும் வகையில் கறவை மாட்டுப்பண்ணை, உள்நாட்டு மாட்டினங்களான காங்கேயம், உம்பளாச்சேரி, ஆலம்பாடி, புலிக்குளம் மற்றும் பர்கூர் ஆகியவற்றின் பாதுகாப்பு மற்றும் இனப்பெருக்கப் பண்ணை, செம்மறி மற்றும் வெள்ளாட்டின பண்ணை, பன்றிகள், கோழியினப் பிரிவுகள் அமைக்கப்பட்டு உள்ளது.

    மேலும் நாட்டின நாய் இனங்களான ராஜபாளையம், சிப்பிப்பாறை, கோம்பை, கன்னி ஆகியவற்றுக்கான இனப்பெருக்கப் பிரிவுகளைக் கொண்ட கால்நடை பண்ணை வளாகம் அமைக்கப்பட்டு உள்ளது. இரண்டாம் பிரிவில், பால், இறைச்சி மீன் மற்றும் முட்டை போன்ற உணவுப்பொருட்களை பாதுகாத்து பதப்படுத்தவும், அவற்றிலிருந்து பல்வேறு உபபொருட்கள், மதிப்பு கூட்டிய பொருட்களை தயார் செய்யவும், அவற்றை சந்தைப்படுத்த வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

    3ம் பிரிவில் பயிற்சி, விரிவாக்கம், கல்வி, ஆராய்ச்சி மற்றும் தொழில் முனைவோருக்கான பயிலரங்கத்துடன் பல்வேறு அம்சங்கள் கொண்ட வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. உலகத்தரம் வாய்ந்த இவ்வளாகம், மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், தொழில்முனைவோர் மற்றும் நுகர்வோர் பயன்பெறும் வகையில், அனைத்து அடிப்படை வசதிகளும் கொண்ட வளாகமாக அமையும்.

    மேலும் கால்நடை மருத்துவ உயர்கல்வி கல்லூரி இந்த ஆண்டு முதல் செயல்பட திட்டமிடப்பட்டுள்ளது. முதலாண்டில் 100 மாணவர்கள் சேர்க்கப்படுவர். இந்த கல்லூரியில் எம்.வி.எஸ்.சி, எம்.டெக், பி.எச்டி படிப்புகள் உலகத் தரத்தில் வழங்கப்பட உள்ளது. இதேபோல் மீனவர்கள், தொழில்முனைவோரை ஊக்கப்படுத்தும் வகையில் பால் பொருட்கள் உற்பத்தி, பதப்படுத்தல், இறைச்சி பதப்படுத்துதல் உள்ளிட்ட தொழில்நுட்ப பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×