search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    2-வது நாளாக இன்று பறவைகள் கணக்கெடுப்பு நடந்தது
    X
    2-வது நாளாக இன்று பறவைகள் கணக்கெடுப்பு நடந்தது

    குமரி மாவட்ட நீர் நிலைகளில் 2வது நாளாக பறவைகள் கணக்கெடுப்பு

    குமரி மாவட்டத்தில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நேற்று தொடங்கியது. மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் தலைமையிலான 7 குழுக்கள் பறவைகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டன.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் அதிகமாக இருக்கின்றன. இதனால் இங்கு ஏராளான பறவைகள் வசித்து வருகின்றன. மேலும் பருவநிலை மாற்றத்துக்காக வெளிநாட்டு பறவைகளும் குமரி மாவட்டத்திற்கு அதிகளவில் வந்து செல்லும்.

    இதனால் குமரி மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் உள்ளூர் பறவைகள் மட்டுமின்றி, வெளிநாட்டு பறவைகளும் அதிகளவில் காணப்படும். நீர்நிலைகளில் உள்ள தண்ணீரில் நீந்துவது, மீன்களை உண்பது போன்ற பறவைகளின் செயல்பாடுகள் பார்ப்பவர்களின் கண்களுக்கு விருந்து படைக்கும்.

    இந்தநிலையில் குமரி மாவட்டத்தில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நேற்று தொடங்கியது. மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் தலைமையிலான 7 குழுக்கள் பறவைகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டன. அந்த குழுவில் வனத்துறையினர் மட்டுமின்றி பறவைகள் ஆர்வலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களும் இடம் பெற்றிருந்தனர்.

    சுசீந்திரம் குளம், மாணிக்க புத்தேரி குளம், சாமிதோப்பு உப்பளம், ராஜாக்கமங்கலம் உப்பளம் உள்ளிட்ட பல்வேறு நீர்நிலைகளில் பறவைகள் கணக்கெடுக்கப்பட்டன. சாமிதோப்பு பகுதியில் மாவட்ட வன அலுவலர் அசோக்குமார், பறவைகள் ஆர்வலர்கள் டேவிட்சன், கிரப் உள்ளிட்டோர் பறவைகளை கணக்கெடுத்தனர்.

    சாமிதோப்பு உப்பளம் பகுதியில் 250-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு வாத்துகள் இருந்தது கணக்கெடுப்பில் கண்டுபிடிக்கப்பட்டது. அது மட்டுமின்றி விதவிதமான வெளிநாட்டு பறவைகளும் இருந்தன. அவை எந்தெந்த பறவைகள், எத்தனை எண்ணிக்கை உள்ளன? என்று கணக்கெடுக்கப்பட்டது.

    குமரி மாவட்ட நீர் நிலைகளில் பறவைகள் கணக்கெடுப்பு பணி 2-வது நாளாக இன்றும் நடந்தது. இன்றைய கணக்கெடுப்பில் மேலும் பல வெளிநாட்டு பறவைகள் வருகை தந்திருப்பது தெரியவந்தது. ஆனால் வழக்கத்தை விட குறைவான அளவிலான பறவைகளே வருகை தந்திருப்பது கணக்கெடுப்பில் கண்டறியப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து பறவைகள் ஆர்வலர் டேவிட்சன் கூறும்போது, “கன்னியாகுமரி மாவட்ட நீர்நிலைகளில் கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு பறவைகள் வரத்து மிகவும் குறைவாக உள்ளது. 35 சதவீதத்திற்கு மேல் பறவைகள் வரத்து குறைந்திருக்கிறது” என்றார்.


    Next Story
    ×