search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குழந்தை உயிரிழப்பு
    X
    குழந்தை உயிரிழப்பு

    தடுப்பூசி போட்டுக்கொண்ட 3 மாத குழந்தை திடீர் உயிரிழப்பு- போலீசார் தீவிர விசாரணை

    கோவையில் தடுப்பூசி போட்டுக்கொண்ட 3 மாத ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிங்காநல்லூர்:

    தர்மபுரியை சேர்ந்தவர் பிரசாந்த். இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களுக்கு கிஷாந்த என்ற 3 மாத ஆண் குழந்தையும், 2½ வயதில் மற்றொரு குழந்தையும் உள்ளது. பிரசாந்த் கடந்த சில ஆண்டுகளாக கோவை மசக்காளி பாளையம் சுப்பண்ணா வீதியில் தங்கியிருந்து கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

    கடந்த மாதம் பொங்கல் பண்டிகைக்காக பிரசாந்த் குடும்பத்தினருடன் சொந்த ஊருக்கு சென்றார். அங்கு பொங்கலை கொண்டாடி விட்டு மீண்டும் கோவைக்கு வந்தார். இங்கு வந்த நாள் முதலே குழந்தை கிஷாந்த்துக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. கடந்த ஒருவாரமாக சளி மற்றும் காய்ச்சல் அதிகமாக இருந்துள்ளது..

    இதையடுத்து பிரசாந்த் தனது மனைவி விஜயலட்சுமியுடன் குழந்தை கிஷாந்த்தை தூக்கிகொண்டு நேற்று காலை அந்த பகுதியில் உள்ள அங்கன்வாடி மைய மருத்துவ முகாமுக்கு சென்றார். அங்கு இருந்த நர்சிடம் குழந்தையின் உடல்நிலையை எடுத்து கூறினர். அப்போது நர்ஸ் உங்கள் குழந்தைக்கு 2½ மாதத்தில் போட வேண்டிய தடுப்பூசி போட்டீர்களா என கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் இல்லை என்று கூறவே அந்த நர்சு குழந்தைக்கு தடுப்பூசி போட்டுள்ளார். மேலும் சளிக்கான மருந்தையும் கொடுத்துள்ளார்.

    அதனை வாங்கிகொண்டு பிரசாந்த் வீட்டிற்கு வந்து விட்டார். வீட்டிற்கு வந்த பின்னரும் குழந்தை உடல்நிலை அப்படியே இருந்தது. பால் குடிக்கவில்லை. திடீரென மூச்சுத்திணறலும் ஏற்பட்டதாக தெரிகிறது.

    இதையடுத்து குழந்தையின் தாய் ஆஸ்பத்திரியில் வாங்கி வந்த சளி மருந்தை குழந்தைக்கு கொடுத்தார். அதனை குடித்த சிறிது நேரத்தில் குழந்தை தூங்கி விட்டது. அதன்பின்னர் விஜயலட்சுமி தனது வேலைகளை பார்க்க சென்று விட்டார்.

    மாலையில் குழந்தையை எழுப்பியபோது எழுந்திருக்கவில்லை. மேலும் குழந்தை எந்தவித அசைவுமின்றி கிடந்தது. இதனால் பதறிப்போன விஜயலட்சுமி தனது கணவருக்கு போன் செய்தார்.

    அவர் உடனடியாக வீட்டிற்கு விரைந்து வந்தார். பின்னர் 2 பேரும் சேர்ந்து குழந்தையை தூக்கி கொண்டு உப்பிலிபாளையத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றனர். அங்குள்ளவர்கள் அரசு ஆஸ்பத்திரி செல்லுங்கள் என்று கூறவே அவர்கள் உடனடியாக அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதை கேட்டதும் குழந்தையின் பெற்றோர் கதறி அழுதனர். இது அங்கிருந்தவர்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். குழந்தை இறந்ததற்கான காரணம் என்ன? தடுப்பூசி போட்டு கொண்டதால் குழந்தை இறந்ததா? அல்லது உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இறந்ததா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதுதவிர குழந்தைக்கு போடப்பட்ட தடுப்பூசி மருந்தையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

    விசாரணையின் முடிவில் தான் குழந்தை இறந்ததற்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.
    Next Story
    ×