search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ பூங்கொத்து கொடுத்து வரவேற்ற காட்சி.
    X
    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ பூங்கொத்து கொடுத்து வரவேற்ற காட்சி.

    தூத்துக்குடியில் 6வது கட்ட பிரசாரத்தை தொடங்கினார் எடப்பாடி பழனிசாமி

    நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று 6வது கட்ட பிரசாரத்தை தொடங்கினார்.
    தூத்துக்குடி:

    சட்டமன்ற தேர்தலையொட்டி அ.தி.மு.க. சார்பில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது பிரசாரத்தை ஏற்கனவே தொடங்கி விட்டார். அதன்படி அவர் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று பிரசாரம் செய்து வருகிறார்.

    இந்நிலையில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் தனது 6-வது கட்ட பிரசாரத்தை இன்று தொடங்கினார்.

    இதற்காக எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று காலை 10 மணிக்கு தூத்துக்குடிக்கு வந்தார்.

    விமான நிலையத்தில் அவரை கலெக்டர் செந்தில்ராஜ் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். தொடர்ந்து அமைச்சர் கடம்பூர் ராஜூ, சண்முக நாதன் எம்.எல்.ஏ. மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் ஒயிலாட்டம், செண்டை மேளம், மேள தாளம் முழங்க முதல்- அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

    விமான நிலையத்தில் கட்சியினரின் வரவேற்பை பெற்றுக்கொண்ட எடப்பாடி பழனிசாமி பின்னர் ஸ்ரீவைகுண்டத்திற்கு புறப்பட்டு சென்றார். அப்போது சாலையின் இரு புறங்களிலும் தொண்டர்கள், நிர்வாகிகள் திரண்டு வரவேற்பு கொடுத்தனர். மேலும் ஏராளமான பெண்கள் அவருக்கு பூரண கும்ப மரியாதை அளித்தனர்.

    தொடர்ந்து ஸ்ரீவைகுண்டத்தில் திரண்டிருந்த பொதுமக்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தில் ஈடுபட்டார். அதனை முடித்து கொண்டு திருச்செந்தூரில் மகளிர் சுய உதவிக் குழுவினருடன் கலந்துரையாடினார்.

    தொடர்ந்து பிற்பகலில் தூத்துக்குடியில் உள்ள தனியார் விடுதியில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. இளைஞர்-இளம்பெண்கள் பாசறை மற்றும் தகவல் தொழில் நுட்ப பிரிவு நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.

    பின்னர் மதியம் அங்கு கட்சியின் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.

    இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனம் மூலம் அமைக்கப்பட்ட ராமநாதபுரம் முதல் தூத்துக்குடி வரையிலான எரிவாயு குழாய் திட்டத்தை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் இன்று மாலை 4.30 மணிக்கு தொடங்கி வைக்கிறார்.

    இந்த விழாவில் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் பங்கேற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார்.

    அதன் பின்னர் மாலை 6 மணிக்கு தூத்துக்குடி சிதம்பரபுரம் வி.வி.டி. சிக்னல் பகுதியில் அ.தி.மு.க. தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடக்கிறது. அந்த கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசுகிறார்.

    அதனை முடித்து கொண்டு இன்று இரவு தூத்துக்குடி தனியார் விடுதியில் ஓய்வெடுக்கும் அவர் நாளை (வியாழக்கிழமை) நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பிரசாரம் செய்கிறார்.

    Next Story
    ×