search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சின்ன வெங்காயம்
    X
    சின்ன வெங்காயம்

    கோவை, திருப்பூரில் சின்ன வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு

    சின்னவெங்காயம் மற்றும் பெரிய வெங்காயத்தின் விலை உயர்வு இல்லத்தரசிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
    கோவை:

    திருப்பூர் தென்னம்பாளையத்தில் தினசரி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டிற்கு உடுமலை, பல்லடம், குடிமங்கலம், பொங்கலூர் உள்பட மாவட்டத்தில் பல பகுதிகளில் பயரிடப்படும் தக்காளி, கத்தரி, சின்ன வெங்காயம், வெங்காயம் உள்ளிட்டவை இங்கு கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகின்றன. குறிப்பாக வெங்காயம் மற்றும் சின்னவெங்காயம் வரத்து அதிகளவில் உள்ளது.

    இதுதவிர கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் சின்ன வெங்காயம் விற்பனைக்கு வருகிறது. எங்கிருந்து வந்தாலும் திருப்பூர் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து வரும் வெங்காயமே அதிகளவில் விற்பனையாகிறது.

    கடந்த மாதம் பெய்த பருவம் தவறிய மழையால் பெரும்பாலான மாவட்டங்களில் சின்ன வெங்காயம் உற்பத்தி பெருமளவில் பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக தென்னம்பாளையம் மார்க்கெட்டிற்கு சின்ன வெங்காயத்தின் வரத்து குறைந்தது. வரத்து குறைவு எதிரொலியால் அதன் விலையும் கிடுகிடுவென உயர்ந்து வாங்க முடியாத நிலைக்கு சென்றது.

    திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டில் கடந்த வாரம் சின்ன வெங்காயம் மொத்த விலைக்கு ரூ.80 முதல் ரூ.90 வரை விற்பனையானது.

    ஆனால் நேற்று ஒரே நாளில் விலை உயர்ந்து விட்டது. கிலோ ரூ.135 முதல் ரூ.150 வரையும், சில்லறை விற்பனை மற்றும் மளிகை கடைகளில் ரூ.160 முதல் ரூ.170 வரை விற்பனையானது.

    இதேபோல் பெரிய வெங்காயமும் கிலோவுக்கு ரூ.40 முதல் ரூ.50க்கும், சில்லறை விற்பனை கடையில் ரூ.60 முதல் ரூ.70 வரைக்கு விற்பனை செய்யப்பட்டது.

    சின்னவெங்காயம் மற்றும் பெரிய வெங்காயத்தின் விலை உயர்வு இல்லத்தரசிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. விலை உயர்வு காரணமாக 1 கிலோ வாங்கும் இடத்தில் அரை கிலோ மற்றும் கால் கிலோ வெங்காயத்தை வாங்கி செல்கிறார்கள். மேலும் வெங்காயம் வாங்குபவர்களின் எண்ணிக்கையும் வெகுவாக குறைய தொடங்கி விட்டது.

    கோவை மார்க்கெட்டிற்கு மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, காரமடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சின்ன வெங்காயம் விற்பனைக்கு வரும். தற்போது வரத்து குறைவு காரணமாக விலை வெகுவாக உயர்ந்துள்ளது. மார்க்கெட்டில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.100 முதல் ரூ.120 வரை விற்பனையாகிறது. சில்லறை கடைகளில் சற்று விலை உயர்ந்தே காணப்படுகிறது.
    Next Story
    ×