search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தஞ்சை பூக்காரத்தெருவில் உள்ள பூ மார்க்கெட்டில் நேற்று விற்பனை விறுவிறுப்பாக நடந்த போது எடுத்த படம்.
    X
    தஞ்சை பூக்காரத்தெருவில் உள்ள பூ மார்க்கெட்டில் நேற்று விற்பனை விறுவிறுப்பாக நடந்த போது எடுத்த படம்.

    முகூர்த்த தினத்தையொட்டி தஞ்சையில் பூக்களின் விலை உயர்வு

    தஞ்சையில் முகூர்த்த தினத்தையொட்டி பூக்களின் விலை உயர்ந்திருந்தது. மல்லிகை, முல்லைப்பூ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனையானது.
    தஞ்சாவூர்:

    தஞ்சை பூக்காரத்தெருவில் பூ மார்க்கெட் உள்ளது. இங்கு 60 கடைகள் உள்ளன. இந்த மார்க்கெட்டுக்கு திண்டுக்கல், நிலக்கோட்டை, சேலம், ஓசூர், கிரு‌‌ஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். அதாவது தினமும் 1000 டன் பூக்கள் இந்த மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும்.

    இங்கிருந்து வேளாங்கண்ணி, நாகை, வேதாரண்யம், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, அரியலூர், திருமானூர், கந்தர்வக்கோட்டை, அம்மாப்பேட்டை, சாலியமங்கலம், திருவாரூர், கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் பூக்கள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தஞ்சை பூ மார்க்கெட்டில் பூக்களின் விலையில் அடிக்கடி ஏற்ற இறக்கம் நிலவி வருகிறது.

    பண்டிகை காலங்களில் பூக்களின் விலை அதிகரிக்கும். நேற்று முகூர்த்த தினம் என்பதால் கடந்த 2 நாட்களாக தஞ்சை பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை உயர்ந்து இருந்தது. 2 நாட்களுக்கு முன்பு ரூ.1,500 வரை விற்பனை செய்த ஒரு கிலோ மல்லிகைப்பூ நேற்று ரூ.2 ஆயிரத்திற்கு விற்பனையானது.அதேபோல் ரூ.800-க்கு விற்ற கனகாம்பரம் ரூ.1,000-த்திற்கும், ரூ.1,000-த்திற்கு விற்ற முல்லைப்பூ ரூ.2 ஆயிரத்திற்கும், ரூ.300-க்கு விற்ற சம்மங்கிப்பூ ரூ.500-க்கும், ரூ.1,000-க்கு விற்ற ஜாதிமல்லி ரூ.1,500-க்கும் விற்பனை செய்யப்பட்டது. ரூ.500-க்கு விற்ற காட்டுமல்லி ரூ.1,500-க்கும், ரூ.250-க்கு விற்ற அரளி ரூ.300-க்கும், ரூ.150-க்கு விற்ற செவ்வந்திப்பூ ரூ.250-க்கும், ரூ.150-க்கு விற்ற ரோஜாப்பூ ரூ.200-க்கும் விற்பனையானது.

    இதேபோல் அனைத்து பூக்களின் விலையும் அதிகரித்து இருந்தது. பூக்களின் விலை அதிகரித்து இருந்தாலும் முகூர்த்த தினம் என்பதால் பூக்களை வாங்கி செல்ல மக்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இது குறித்து பூ வியாபாரிகள் கூறும்போது, கடந்த மாதம் பெய்த தொடர் மழையால் பூந்தோட்டம் பல இடங்களில் அழிந்துவிட்டது. இதனால் தற்போது பூக்களின் வரத்து குறைவாகவே இருக்கிறது. முகூர்த்த தினம் என்பதால் பூக்களின் விலை அதிகரித்தாலும் மக்களும் அதிகஅளவில் வாங்கி சென்றதாக தெரிவித்தனர்.
    Next Story
    ×